Thursday, 31 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 8

பாடல் - 8
ராகம் - கானடா
தாளம் - ஆதி, திஸ்ர நடை

வியரிலங்குவரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர் கள்வன்
துயரிலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
வியக்கத்தக்க வலிமை பொருந்திய உயர்த்திய தோள்களை உடைய இலங்கை அரசன் ராவணன் பல வீரச்செயல்களை செய்துள்ளான். அவனது வீரத்தை வெற்றிக்கொண்ட நம் உள்ளம் கவர் கள்வன் சிவபெருமான். ஒருமுறை கயிலை மலையினையே பெயர்த்து எடுத்து இலங்கைக்கு செல்ல முயற்சி மேற்கொண்ட ராவணன், சிவபெருமானின் கால் கட்டை விரல் அழுத்தி மிதித்ததால், மலையினை பெயர்க்க முடியாமல் தோல்வியுற்றான். இவ்வாறு இலங்கை அரசனின் வலிமையினை வெற்றிக்கொண்ட நம் உள்ளம் கவர் கள்வன் இவர்.

துயரம் நிறைந்த இவ்வுலகினில், பிரளய காலம் தோன்றும் பொழுதெல்லாம், மூழ்காமல் மிதந்து காணப்பட்ட இந்த பெயர் பெற்ற பிரமாபுரத்தில் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 30 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 7

பாடல் - 7
ராகம் - அம்ருதவர்ஷினி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வெய்த
உடை முயங்கும் அரவோடு இழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ்குளிர் கானல் அம்பொன் அம்சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
கடலில் உணரப்படும் குளிர்ந்த காற்று போல், குளிர்ச்சியான, அம்பொன் -சிறந்த பொன்மயமான, அம்சிறகு - அழகிய சிறகுகளை உடைய அன்னப்பறவைகள் வசிக்கும் பிரமாபுரம் மேவிய பெம்மான் எப்படிபட்டவர்?

1. சடையில் கங்கையினை தாங்கியவர்
2. தாருகா வன முனிவர்கள் எய்த நெருப்பினை கையில் தாங்கியவர்
3. சதங்கைக்கட்டி ஆனந்த நடம் ஆடுபவர்
4. தன் கழுத்தில், உடையாக பாம்பினை உடுத்தவர்
5. நம் உள்ளத்தை கவர்ந்த கள்வர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 28 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 6

பாடல் - 6
ராகம் - நாட்டைக்குறிஞ்சி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

மறை கலந்த ஒலி, பாடலொடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

வேத கோஷங்கள் மற்றும் பாடல்களுக்கு மகிழ்ந்து நடனம் ஆடுபவர் நம் பெருமான்.
தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை, தன் கையில் மகிழ்வோடு ஏந்தியவர் நம் இறைவன்.
தன் மீது பக்தி வைத்திருக்கும் அடியார்கள், இறைவனின் காட்சி கிடைக்காததால் சோர்ந்து, அந்த அடியார்களின் சங்கு வளையல்கள் கழன்று கீழே விழ வைக்கும் உள்ளம் கவர் கள்வன்.
இறைவன் மீது பற்று வைத்ததால் சம்சார சாகரத்தின் கறையினை கடக்கும் அடியார்கள் வாழும் ஊரும், நெடிய உயர்ந்த செடிகள் நிறைந்த சோலைகளில் பூக்கும் மலர்களால் வாசம் எங்கும் பரவும் ஊரும். பிறை அணிந்த பெருமான் மேவும் ஊரும் ஆகிய இந்த பிரமபுரத்தின் பெருமான் நம்தலைவனாகிய சிவபெருமானே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Sunday, 27 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 5

பாடல் - 5
ராகம் - ஸ்ரீ
தாளம் - ஆதி, திஸ்ர நடை

ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன், என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இதுவென்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
ஊழியின் பொழுது (பிரளய காலம்) கருமை நிறம் கொண்ட கடல் பொங்கி, உலகினை மூழ்கடித்த போது, இந்த பிரமாபுரத்தில் மேவிய இப்பெருமான், தோணியப்பராக  இருந்து காத்தவர். அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்தலம் இந்த சீர்காழி. பெருமை வாய்ந்த இறைவன், தன் ஒரு பாகத்தில், உமையவளை கொண்டவர். சடை முடி தரித்தவர். விடையில் (காளைமாட்டின் மீது) ஊர்வலம் வருபவர். சிறப்பாக அமர்ந்து (மௌன நிலையில்), சனகாதி முனிகளுக்கு ஞான உபதேசம் செய்பவர். இவர் நம் யாவரின் உள்ளதையும் கவரும் கள்வர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 26 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 4

பாடல் - 4
ராகம்: வராளி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

விண்மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உண்மகிழ்ந்து பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

விண்ணில் உள்ள ஒரு கோட்டை, திரிபுரம். அசுரர்கள் மயனின் உதவி கொண்டு அமைத்த நகரம் அது. அதில் உள்ள மதில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. அந்த மதில்களை, ஒற்றை அம்பினை எய்தி, அழித்தார் சிவபெருமான். அதுமட்டும் அல்லாது, கபாலத்தை கையில் ஏந்தி, பிக்ஷை எடுத்து மகிழ்வார். இவர் நம் உள்ளதை கவர்ந்த கள்வர்.

மண்ணில் மகிழ்ந்து இருக்கும் பாம்பினை (அரவம் - பாம்பு) தன் கழுத்தில் அணிந்துள்ளார். கொன்றை மலரால் கட்டிய மாலையினை தன் மார்பில் அணிந்துள்ளார்.

அம்பிகைக்கு தன் உடலில் ஒரு பாதியைக் கொடுத்து மகிழ்பவர்.

இந்த சிறப்புகள் நிறைந்த நம் பெருமானே, பிரமாபுரத்தில் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday, 25 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 3

பாடல் - 3
ராகம் - ஆரபி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

நீர் பரந்த நிமிர் புன் சடை மேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம்கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இதுவென்ன
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

1. கங்கை பாயும், நிமிர்ந்த, நீண்ட, மெல்லிய  சடையில், ஒரு வெண்மையான நிலவினை சூடியவர். சிவன் எப்போதும் நிமிர்ந்தே அமர்வார். கம்பீரமான தோற்றம் உடையவர்.

சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், ஒரு உபன்யாசத்தின் போது, திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் சரித்ரத்தை பற்றி பேசினார். அப்போது, அய்யாவாளின் வீட்டுக் கிணற்றில், கார்த்திகை மாத அமாவாசையின் போது, கங்கை வந்த சம்பவத்தை விவரித்தார். கங்கை கிணற்றிலிருந்து தோன்றிய சம்பவத்தை, பல பெரியோர்கள் அய்யாவாளுடன் இருந்து பார்த்தனர். அவர்களுள் ஸ்ரீ சதா சிவ ப்ரம்மேந்த்ராளும் ஒருவர். அவர் துங்க தரங்கே கங்கே ஜய என்று ஒரு கீர்த்தனம் பாடினார். மேலும் பல க்ருதிகள் பாடினார். அதில் ஒன்றில், சிவபெருமானிடம் கேட்பது போல் ஒரு சம்பவம் வரும். "சிவபெருமானே, நீர் எப்போதும் நிமிர்ந்தே காணப்படுவீர். ஸ்ரீதர அய்யாவாளின் பக்திக்கு தலை வணங்கி, கங்கையை அவர் வீடுக்கிணற்றில் விட்டீரோ!" என்று கேட்பது போல் அமைந்திருக்கும்.

2. தன் பக்தனாகிய நாயகியின் சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு விரக தாபத்தினை உண்டு பண்ணும் கள்வர். அதாவது, இறைவன் (தலைவன்)  தன்னிடமிருந்து பிரிந்ததால் (தற்காலிகமாக - இந்த மானுட பிறவி எடுத்ததால், ப்ரம்மதினிடமிருந்து வேறாக பிரிந்து நாம் பிறந்துள்ளோம்), தாபத்தினால், உடல் இளைத்து, அந்த தலைவி (தலைவி - நாம்) அணிந்த சங்கு வளையல்கள் நழுவி கீழே விழுமாம். அதற்கு காரணமான நம் உள்ளம் கவர்ந்த கள்வர் இறைவன்.

3. பல ஊர்கள் நிறைந்த இந்த உலகில், பிரளயத்தின் போது மற்ற ஊர்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது, அழியாமல் இருந்த சீர்காழி, அடுத்த மன்வந்தரத்தில், மீண்டும் அண்டம் தோன்றிய போது, முதலில் தோன்றிய ஊராக கருதப்பட்டது.

4. அப்படிப்பட்ட பேர் பெற்ற பிரமாபுரத்தில் மேவும் பெம்மான், இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 24 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 2

பாடல் - 2 
ராகம்: கௌளை
தாளம்: ஆதி, திஸ்ர நடை

முற்றல் ஆமை இள நாகமோடு என முளைக்கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடுகலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
முற்றல் ஆமை - வயது முதிர்ந்த ஆமை. விஷ்ணு, கூர்மாவதாரத்தில் ஆமை வடிவு கொண்டாரல்லவா? அந்த ஆமையின் ஓடினை, தன் மார்பில் அணிந்தார் சிவபெருமான்.

இள நாகம் - இளமையான பாம்பு. பாம்பினை பரமசிவன் தன கழுத்தில் அணிந்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

முளைக்கொம்பு - காட்டுப்பன்றியின் ஒற்றைக்கொம்பு. திருமால், சிவனின் பாதத்தினை காண வராகமாக பூமிக்கு அடியில் தோண்டிக்கொண்டு சென்றார். பின்னர் காண முடியாமல் திரும்பினார். அதனால், பன்றியின் கொம்பினை உடைத்து, தான் அணிந்து கொண்டார்.

முதிர்ந்த ஆமையின் ஓடு, இளைய நாகம், பன்றியின் கொம்பு ஆகியவற்றை சிவ பெருமான் அணிந்துள்ளார்.

வற்றிய ப்ரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்தி பிக்ஷை எடுக்கும் பெருமான், நம் உள்ளம் கவர் கள்வன்.

காந்த சக்தியால் ஊசி போலவே
பிக்ஷாடனர் கோலமான கபாலியின்
சௌந்தர்ய வெள்ளம் தன்னில்
என் உள்ளம் மயங்கி விழுந்து அமிழ்ந்ததே

என்று பாபநாசம் சிவன், இறைவனின் இரவலர் கோலம் (பிக்ஷாண்டார்) பற்றி தான் எழுதிய சௌந்தர்ய வெள்ளம் தன்னில் என்ற மோகன ராக பாடலில் பாடியுள்ளார். அதாவது, காந்தம் எப்படி ஊசியினை தன்னிடம் இழுக்குமோ, அதுபோல் கபாலியின் பிக்ஷாண்டார் கோலம், தன்னை கவர்ந்து இழுக்கின்றது என்று பொருள்.

கற்றல், கேட்டல் உடையார் பெரியார் - இறைவனின் புகழினை கற்பவர்கள், இறைவனின் பெருமையினை கேட்பவர்கள் ஆகியோரை பெரியோர்கள் என்று சம்பந்தர் கூறுகிறார். அப்பெரியோர்கள், தங்கள் கைகளால், இறைவனின் திருப்பாதங்களை பற்றி, வணங்கி, அவர் புகழை பாடுகின்றனர்.

பெற்றம் ஊர்ந்த - வெள்ளை ரிஷபத்தின் மீது, இந்த பிரமாபுரத்தை வலம் வரும் பெருமான் இவரே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Wednesday, 23 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 1

திருஞானசம்பந்தர் முதலில் பாடிய பிரமப்புரம் என்னும் சீர்காழி ஸ்தல பதிகத்தினை முதலில் காண்போம்.

சீர்காழி என்னும் ஊர், பிரளய காலத்தில், உலகம் நீரில் மிதந்த போது, தோணியப்பர் அருளால், நீரில் மூழ்காமல் இருந்தது. தோணி என்றால், படகு. சம்ஸாரம் என்னும் கடலில் தத்தளிப்போற்கு, படகு போல் இருந்து, கரை சேர்ப்பவர் நம்பெருமான். அதனால் அவர் பெயர் தோணியப்பர் என்றானது. சீர்காழி இறைவனை தொழுதால், பாதுகாப்பாக கரை சேர்வோம் என்று இதிலிருந்து தெரிகிறது.

பிரம்மா, சிவனை வணங்கி பூஜித்த ஸ்தலம் ஆதலால் பிரமப்புரம் என்ற பெயர் பெற்றது சீர்காழி.

சிவபெருமானுக்கு சட்டநாதர், ப்ரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்னும் பெயர்கள் இந்த ஸ்தலத்தில் உண்டு. அம்பாள் திரிபுரசுந்தரி. தேவார பாடல் பெற்ற 276 ஸ்தலங்களில், இந்த ஸ்தலம், சோழ நாடு, காவிரி வடகரை ஸ்தலங்கள் 63-ல், 14-வது ஸ்தலம். இந்த ஸ்தலத்தின் மற்றொரு பெயர் தோணிபுரம்.

இந்த ஊர், 108 வைணவ திவ்யதேசங்களிலும் ஒன்று. காழி சீராம விண்ணகரம் என்ற பெயர் கொண்டது. த்ரிவிக்ரம பெருமாள் அருள் புரியும் அழகிய ஊர்.

அடியார்களின் பழவினைகளை களையும் இப்பதிகம், ராகமாலிகையில் இசை அமைக்கப்பட்டுள்ளது. தாளம் - ஆதி தாளம், திஸ்ரநடை.

பாடல் - 1
ராகம் - நாட்டை
தாளம்: ஆதி, திஸ்ர நடை

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

பொருள்:
பீடுடைய பிரமாபுரம் - பெருமை மிகுந்த பிரமாபுரம் என்னும் ஊரில் இருக்கும், பெம்மான் எப்படிபட்டவர்?
1. தோடு அணிந்த செவிகளை உடையவர்
2. விடை - ரிஷபம், காளை மாடு. ரிஷபத்தில் உலா வருபவர்.
3. தூய, வெண்மையான நிலவினை தன் தலையில் சூடியவர்
4. இடுகாட்டில் இருக்கும் சாம்பலினை தன் உடல் முழுதும் பூசி இருப்பவர். சுடலைப்பொடி - விபூதி.
5. தாமரை இதழ்கள் போல் விரிந்த நான்கு முகம் கொண்ட பிரம்மாவால், நாளும் பணிந்து வணங்கப்பட்டவர். பிரமனுக்கு அருளியவர்.
6. சம்பந்தரின் உள்ளதை கவர்ந்த கள்வர்.

கிராம தேவதைகளில், சுடலைமாடன் சாமி என்று ஒருவரை கூறுவார். அவர் நம் சிவபெருமானே என்று இதிலிருந்து தெரிகிறது.
சுடலை + மாடன் - சுடலை மாடன். அதாவது சுடலைப்பொடி பூசி, மாட்டின் மீது உலா வருபவர். விடையில் உல்லாசா என்று கோபாலக்ருஷ்ண பாரதி, நடன சபேசா (கானடா ராகம்) என்ற தனது கீர்த்தனையில் பாடியுள்ளார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 22 December 2015

குறிப்பு

திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாக நம் மாநிலத்தில் அவதரித்தவர். அவர், சிவபெருமான் மீது எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார். 12 திருமுறை என்னும் தொகுப்பு, சிவபெருமான் மீது, அடியார்கள் பாடிய தலை சிறந்த பாடல்களின் தொகுப்பு. 12 திருமுறையில், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள், முதல் மூன்று திருமுறைகளில் வருகிறது.

சம்பந்தர், சீர்காழியில் உள்ள சிவன் (தோணியப்பர்) கோவிலில், பூஜை செய்யும் அர்ச்சகரின், மகனாக, வைகாசி மாதம், மூலம் நக்ஷத்திரத்தில், அவதரித்தார். ஒரு நாள், சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்காக, சம்பந்தரின் தந்தை சென்றிருந்தார். சிறு குழந்தையான சம்பந்தரை, குளத்தின் அருகே விட்டுச்சென்றார். அவர் திரும்ப சிறிது நேரம் ஆனது. குழந்தைக்கு பசி எடுத்ததால், அக்குழந்தை அழத்தொடங்கியது. உடனே, கருணாமூர்த்தியான எம்பெருமான் தோணியப்பர், தன் மனையாள் திரிபுரசுந்தரியை அனுப்பி, சம்பந்தனின் பசியை போக்குமாறு உத்தரவிட்டார். அன்னையோ, அண்ணலின் உத்தரவிற்காகவே காத்திருந்து, உத்தரவு வந்தபின், ஓடி சென்று, தன் முலைப்பாலினை சம்பந்தருக்கு கொடுத்து அருளினாள். பின்னர் அவ்விடத்தை விட்டு மறைந்தாள்.

பூஜை முடிந்து வந்த தந்தைக்கு ஆச்சர்யம் கலந்த பயம். குழந்தையின் வாயில் பால் ஒட்டிக்கொண்டிருந்தது. தங்கத்தினால் ஆன ஜால்ரா (cymbals) குழந்தையின் கையில் இருந்தது. ஒரு தங்கக்கிண்ணம் கீழே இருந்தது. 'இது எப்படி நடந்தது? யார் பால் கொடுத்தார்கள்?" என்று வினவ, குழந்தை, ஆகாயத்தை காட்டியது. கோபத்தால், அடிக்க தந்தை தன் கையை உயர்த்த, பால் அருந்திய குழந்தை, பாலினும் இனிய பாக்களை பாடத் தொடங்கியது. தோடுடைய செவியன் என்று தொடங்கி, 10 பாடல்கள் + பலஸ்துதி பாடல் 1 மொத்தம் 11 பாடல்கள் ப்ரவாகமாக வந்தன.

தெய்வத்தின் அனுக்ரஹம் என்று சுற்றி உள்ள அனைவருக்கும் விளங்கியது. சம்பந்தன் ஞான சம்பந்தன் ஆனார். திருஞானசம்பந்தன் என்று உலகம் போற்றியது.

சென்ற ஸ்தலத்தில் எல்லாம், 10 பாடல்கள் கொண்ட தொகுப்பாக பாடினார். ஒவ்வொரு பதிகமும், ஒரு பலனை நல்கும். அதனால் அவை அனைத்தின் தொகுப்பும், திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்பட்டன.

சம்பந்தன் = சம் + பந்தன். சம் - நல்ல, பந்தன் - பந்தம் உடையவன். நல்ல விதமான பந்தம் உடையவர். நல்ல விதமான பந்தத்தை தருபவர். நல்ல பந்தம் என்றால், இறைவனோடு சேர்தல். பெயருக்கு ஏற்றாற்போல், இறைவனோடு அவரும் சேர்ந்தார். தன்னுடன் வந்தவர்களையும் இறைவனிடத்தே ஐக்கியம் அடைய செய்தார். தான் எழுதிய பாடல்களை பாராயணம் செய்வதால் இறைவனை அடையலாம் என்ற வழியை மக்களுக்கு காட்டினார். தனது திருமணம் முடிந்த பின்னர், தான், தன் மனைவி, அங்கு கூடி இருந்த உறவினர்கள் யாவரையும் சிவபெருமானின் சன்னிதி முன் தோன்றிய ஜோதியில் சேர்ப்பித்தார்.

இந்த வலைப்பதிவில் இனி, சம்பந்தரின் பாடல்களை படிக்கலாம், கேட்கலாம். சம்பந்தரின் ஞானம் கடல் போன்றது. அந்த கடலிலிருந்து என்னால் இயன்றவற்றை எடுத்து, உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆங்காங்கே தவறுகள் இருந்தால், தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். சரி செய்துக் கொள்கிறேன். ஒளவையார் கூறியது போல், கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு அல்லவா? இந்தப் பதிவினை எழுதும் வகையில், உங்களோடு சேர்ந்து நானும் கற்கிறேன்.

சம்பந்தர் மீதான குறிப்பு, ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி, மற்றும் அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி, ஆகியவற்றில் வந்துள்ளது. அதை பற்றி படிக்க, இங்கு அழுத்தவும்.

என்றும் இறைவன் அருளையும், உங்கள் அன்பையும் எதிர்நோக்கும்,
சரண்யா