Thursday, 25 February 2016

திருநல்லம் பதிகம்

ராகம்: ராகமாலிகை
தாளம்: ஆதி (திஸ்ரநடை)

பாடல் - 01
ராகம் - செஞ்சுருட்டி

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 02
ராகம்: ஹம்ஸத்வனி

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 03
ராகம்: புன்னாகவராளி

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 04
ராகம்: நாதநாமக்ரியா

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பாடல் - 05
ராகம் - பிருந்தாவன சாரங்கா

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 06
ராகம்: காபி

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 07
ராகம்: பெஹாக்

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 08
ராகம் - மாண்ட்

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பாடல் - 09
ராகம் - தேஷ்

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பாடல் - 10
ராகம்: திலங்

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பதிக பலன்
ராகம்: சிந்து பைரவி

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 10 February 2016

திருநல்லம் - பதிகத்தின் பலன்

ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி திஸ்ரநடை

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பொருள்:

நலம் தரும் மறையினை ஓதும் வேதியர்கள் வாழும் நல்லத்தில் அருள்பவரும், அழிக்கும் தொழில் புரிய கையில் மழுவை (நெருப்பை) எந்தியவருமான சிவபெருமானை, கொச்சைவயம் (சீர்காழியின் மற்றொரு பெயர்) என்னும் ஸ்தலத்தில் வாழும் ஞானசம்பந்தனால் சொல்லப்பட்ட இந்த பதிகத்தினை சொல்லக்கூடியவர்களின் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை கலை என்று சம்பந்தர் கூறுகிறார். இதிலிருந்து இந்த பதிகத்தின் உயர்வை காண்க.

கொச்சைவயம் என்ற பெயர் ஏற்பட்ட காரணம்:
பராசர முனிவர் மச்சகந்தியை கூடிய பழிச்சொல் (கொச்சை) நீங்க வழிபட்ட ஸ்தலம் ஆதலால் கொச்சைவயம் என்ற பெயர் பெற்றது.

சம்பந்தரிங் முந்தைய பதிகங்களில் சீர்காழிக்கு அவர் கூறிய பிற பெயர்களை நினைவு கொள்வோம்.

திருநெடுங்களம் பதிகத்தில் - சிரபுரம்
திருபிரமபுரம் பதிகத்தில் - பிரமாபுரம்

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 8 February 2016

திருநல்லம் - 10

ராகம்: திலங்
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குறியில் - குறிக்கோள் இல்லாத
குறிக்கோள் இல்லாத சமணர், பௌத்தர் ஆகியோரின், அறிவற்ற உரைகளை (அறிவில் உரை) கேட்டு, ஒரு மணித்துளியும் வீணாக்காதே.

ஒளி மிகுந்த பாம்பினை, தன் இடையில் கட்டிக்கொண்ட அரவார் ஒருவரே, நம்  பொல்லா வினைகளையெல்லாம் தீர்க்க வல்லவர். அவர் அருளும் ஸ்தலமும், தேன் போன்ற இனிமை சூழ்ந்த ஸ்தலமுமான நல்லத்தை நாடுங்கள். நன்மை பெறுங்கள் என்று சம்பந்தர் பாடுகிறார்.

சம்பந்தரின் பதிகங்கள் முன்பு பார்தவையில், 10 ஆம் பாடல், சமண, பௌத்தர்களை கடியும் படி உள்ளது.

திருநெடுங்களம் பாடல் 10
திருபிரமபுரம் பாடல் 10

இரண்டையும் இதனோடு ஒப்பிட்டு பார்க்கவும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 6 February 2016

திருநல்லம் - 09

ராகம் - தேஷ்
தாளம் - ஆதி திஸ்ரநடை

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பொருள்:

நாகத்து அணையான் - நாகத்தினை தலையணையாக கொண்ட விஷ்ணு
நளிர் மா மலரான் - அழகிய தாமரைப் போன்ற முகங்கள் கொண்ட ப்ரம்மா

விஷ்ணுவும், பிரம்மாவும் போகத்தால் அலைமகளோடும், கலைமகளோடும் மகிழ்ந்து இருக்கின்றனர்.

பாம்பினை, தன் இடையில் (நாகம் அரையார்) அணிந்த சிவபெருமானும், அழகே வடிவான மலைமகளோடு அமர்ந்து,  அருள் புரியும் இடம், நல்லம் நகராகும்.

இன்று ப்ரதோஷம். சனி ப்ரதோஷம் மிகவும் விசேஷம். இன்று, பெருமான், அம்மையோடு கூடிய வைபவத்தை த்யானம் செய்தல் மிக உயர்ந்த பலனை அளிக்கும்.

சம்பந்தர் பதிகங்கள் இதுவரை கண்ட மூன்றில், 9-வது பாடலில், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் பற்றிய குறிப்பு காணப்படும்.

திருநெடுங்களம் பாடல் - 9, திருப்பிரமபுரம் பாடல் - 9 காண்க.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 4 February 2016

திருநல்லம் - 08

ராகம் - மாண்ட்
தாளம் - ஆதி திஸ்ரநடை

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பொருள்:

பெண்ணார் திருமேனிப் பெருமான் - தேவியை தன் திருமேனியில் இடப்புறத்தில் கொண்ட பெருமான்

பிறை மல்கு கண்ணார் நுதலினான் - பிறை சூடியவர். நுதல் - நெற்றி. நெற்றியில் ஒரு கண் உடையவர்.

கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை - இலங்கை அரசன் இராவணன் மாபெரும் சிவ பக்தன். கயிலாய மலையினை பெயர்த்து எடுத்து, இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையினை மட்டுமே கொண்டான். சிவபெருமானின் பலத்தை நினைத்துப் பார்க்கவில்லை. பெருமானின் மகிமையினை எண்ணாது கயிலை மலையை பெயர்த்து எடுத்தவனை,

இறையே விரலூன்றி நண்ணார் புரம் எய்தான் - சிவபெருமான், தன் கால் கட்டை விரல் ஒன்றை மட்டுமே பூமியில் ஊன்றி, இராவணனை கயிலை பகுதியை விட்டு வெளியே எறிந்தார். எய்திய அம்பு போல, இராவணன் கீழே விழுந்தான். மேலும் அரக்கர்களின் புரமான திரிபுரத்தை, ஒற்றை அம்பினை எய்தி அழித்தார்.

அவரே, நல்லம் நகர் மேவுபவர்.

சம்பந்தர் பதிகங்களில் இராவணன், சிவபெருமானிடம் தோற்ற சம்பவம் அடிக்கடி இடம்பெறும். திருநெடுங்களம் பதிகம் பாடல் 8 (குன்றின் உச்சி மேல்), திருப்பிரமபுரம் பதிகம் பாடல் 8 (வியரிலங்குவரை) ஆகியவற்றிலும் காணலாம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 3 February 2016

திருநல்லம் - 07

ராகம்: பெஹாக்
தாளம்: ஆதி திஸ்ரநடை

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:

அங்கோல் - அம்+கோல் = அழகிய கொடி.
வளை மங்கை - வளையல்கள் அணிந்த பெண்

அழகிய கொடிபோல் வரிசையாக வளையல்கள் அணிந்த உமா தேவி காண, தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை தன் கையில் ஏந்தியவர் நம் சிவபெருமான்.

நல்ல கொன்றை மலர்களை சூடிய கூந்தல் உடையவர்.

வெங்காடு = இடுகாடு. அதுவே சிவனின் இடம். அந்த இடத்தில், தீயினை கையில் ஏந்தி, தாண்டவம் ஆடி, சம்ஹாரம் (அடக்கம்) என்னும் தொழிலினை புரிகிறார்.

இத்தகு பெயர் பெற்ற நல்ல அரசன் (நங்கோன்), நல்லம் நகர் மேவுபவர் நம்மை ஆள்வார்.

குறிப்பு:
அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். அ + பர்ணா - பர்ணம் - இலை. இலைகள் இல்லாத கொடி போன்றவள் அம்பாள். அதனால் அபர்ணா என்று பெயர். சிவபெருமான் கட்டை மரம் போல், அசைவற்றவர். அவரை கொடிபோல் சுற்றியவள் அம்பாள். இவர்களின் கீழ், கிளைகள் இல்லாத கன்று ஒன்று. அவரே விசாகன் என்ற முருகப்பெருமான். வி + சாகன் = சாகை - கிளை. விசாகை = கிளைகள் அற்றது. சோமாஸ்கந்த மூர்த்தியின் தத்துவம் இதுவே. சிவன் (சோமன்), பார்வதி இருவருக்கும் இடையே முருகனின் (ஸ்கந்தன்) திருவுருவம் இருக்கும். சோம + ஸ்கந்த = சோமாஸ்கந்தன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 2 February 2016

திருநல்லம் - 06

ராகம்: காபி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
வாசனை நிறைந்த மலர்களை சூடிக்கொண்டிருக்கும், மலையரசனின் மகளோடு ஒன்றாக வீற்றிருப்பவர் சிவபெருமான். மலையரசனின் புதல்வி என்பதால், அன்னைக்கு மலைமகள், ஷைலஜா, ஹைமவதி, கிரிஜா என்ற பெயர்கள் வந்தன.

சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொண்டுள்ளது திருநீறு. சுடு நீறு என்று சம்பந்தர் இங்கு கூறியுள்ளார். இடுகாட்டில், தேகங்களை தகனம் செய்தபின் வருவது சாம்பல். அந்த சாம்பலை பெருமான் பூசியுள்ளார். அதனால் சுடுநீறு என்று சம்பந்தர் கூறியுள்ளார்.

திருவெண்காடு என்று ஒரு ஸ்தலம். நவக்ரஹ ஸ்தலங்களுள் புதனுக்கு உரிய ஸ்தலம். ஸ்வேதாரண்யம் என்று சமஸ்க்ருதத்தில் அதற்கு பெயர். சுடுகாட்டில் காணப்படுவது வெள்ளை நிற விபூதி. வெம்மையான காடு அல்லது வெள்ளை நிறக்காடு ஆனதால், வெண்காடு என்று பெயர் பெற்றது.

விரி கொன்றை ஈசன் - விரிந்த சட முடி கொண்ட, கொன்றைப்பூக்கள் சூடிய சிரத்தை உடைய ஈசன்.

ஈசனின் பெயரை உள்ளம் உருக பாடினால், நம் வினைகளை நாசம் செய்வார். உருகி என்பது, வழக்கில் உள்கி என்றானது.

அப்படிப்பட்ட, வினைகளின் நாசன், நம்மை ஆள்வார். அவரே நல்லம் நகர் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 1 February 2016

திருநல்லம் - 05

ராகம் - பிருந்தாவன சாரங்கா
தாளம் - ஆதி திஸ்ரநடை

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
மணியார் திகழ் கண்டம் - சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டு, அதனை தன் கழுத்துப்பகுதியில் நிறுத்தியதால், மணி போல் அந்த பகுதி, பருத்துக் காணப்படும்.

மலர் மல்கு பிணி வார் சடை எந்தை - மலர்கள் பிணைந்து காணப்படும் சடையினை உடைய என் தந்தை

மணி போன்ற கழுத்துப்பகுதியை உடையவரும், மலர்கள் தரித்த சடையினை உடையவரும், நம் தந்தையானவருமான நம் பெருமானின் கழல்களை, மலர்கள் கொண்டு தொழுது போற்றும் அடியார்களால் சூழப்பட்டவருமான நல்லம் நகரான், ஸ்ரீ உமாமஹேச்வரர் நம்மை காக்கட்டும்.

 பாடல் கேட்க:

Check this out on Chirbit