Thursday, 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றலும், வலிமையும் உடைய விடையின் மீது ஏறிவரும் ஆலவாயானின் திருநீற்றைப் போற்றி, பூசுரனான ஞான சம்பந்தன் செய்த இப்பாடல், தென்னனின் (பாண்டியனின்) வெப்பு நோயினைத் தீர்த்து. இப்பதிகத்தை ஓதுவார்கள், நல்லவர்களாவார்கள்.

திருநீற்றுப் பதிகம் முற்றிற்று.

பதிகத்தை ஓதி, நன்மை அடைவோமாக.

பின் குறிப்பு: நம்மில் பலர் திருநீற்றை (விபூதி) இட்டுக்கொள்வதில்லை. இதன் உயர்வு நமக்கு தெரிவதில்லை. இன்று முதல், நாம் இட்டுக்கொள்வோம்.

நமச்சிவாய வாழ்க!

திருச்சிற்றம்பலம்.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே

அண்டத்தில் உள்ளவர்கள் பணிந்து போற்றும் ஆலவாயானின் திருநீறானது:
1. குண்டிகை - கமண்டலம், சாக்கியர் - சமணர்.
கமண்டலம் ஏந்தும் பௌத்தர்கள், சமணர்கள் ஆகியவர்களுக்கு திகைப்பினைத் தருவது.
2. எண்ணுவதற்கு இனியது.
3. எட்டுத் திசைகளில் வாழும் உணர்வுடயோர்களால் (sensible persons), போற்றப்படுவது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 9

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

ஆலம் - விடம். விடத்தை உண்டு, அதனால் கறுத்த மிடறுடைய (மிடறு - கழுத்து), ஆலவாயனின் திருநீறு,
1. மாலும் (விஷ்ணுவும்), அயனும் (பிரம்மனும்) அறியாத வண்ணம் உடையது. சிவபெருமானின் அடியும் முடியும் காண பிரமனும், விஷ்ணுவும் மேலும் கீழும் தேடி அலைந்து தோல்வியுற்றனர் அல்லவா? அதனால் அவர்களால் அறிய முடியாத வண்ணம் கொண்டது என்கிறார்.
2. வானுலகில் உள்ள தேவர்கள், தங்கள் உடல் முழுதும் பூசிக்கொள்வது.
3. பிறவி என்னும் துயரைத் தீர்க்கவல்லது. பிறவி இல்லை எனில் இன்பமே. அதனால் பேரின்பத்தைத் தர வல்லது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 8

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

அரா - பாம்பு. பாம்புகளை அணிந்த திருமேனி உடைய சிவபெருமான் அவன் திருநீறு,
1. இராவணன் அவன் உடலில் பூசிக்கொண்டு பயன் பெற்றது.
2. நல்ல சிந்தனை கொண்டவர்களால் நினைக்கத் தக்கது.
3. பராவணம் - பரா சக்தி. பராசக்தியின் வடிவமானது.
4. பாவங்களை அறுக்கக்கூடியது.
5. தராவணம் - உயர்ந்த தத்துவம். பிரம்ம ஞானம் ஆனது.
6. தத்துவம் - மெய்ப்பொருள் (பிரம்மம்) ஆனது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 7

எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம் அதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆல வாயான் திருநீறே

அயில் - கூறிய மும்முனைகளை உடைய சூலம்.
சூலத்தைக் கையில் ஏந்திய ஆலவாயானின் திருநீறு,
1. எயில் - மதில். மும்மதில்/மூவெயில் - திரிபுரம். திரிபுரத்தை எரித்தது. திரிபுரம் எரிந்து பின் சாம்பலாக ஆயிற்று.
2. இம்மை, மறுமை ஆகிய இருபிறவிக்கும் பாதுகாப்பு தரவல்லது.
3. அணிவோர்க்கு (அணிந்து பழகியோர்க்கு) பலனைத் தருவது
4. பாக்கியம் - செல்வம். திருநீறே செல்வமாகும். விபூதி என்றால் பெருமை.
5. துயில் - உறக்கம். சோர்வினைத் தவிர்ப்பது.

இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். பகலில் சில சமயங்களில் உறக்கம் வருவது போலோ, தலை வலிப்பது போலோ உணர்ந்தால், திருநீறை நெற்றியில் இட்டுக்கொள்வேன். ஒரு புத்துணர்வு கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை, திருநீறு உறிஞ்சிவிடும் என்று பலர் அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். அதனால் தலைவலி குணமடைகிறது. தோலில் ஏற்படும் அரிப்பு கூட சரியாகி விடும். சர்வ ரோக நிவாரணி.

6. சுத்தமானது.