Thursday, 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 1

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை.

பாண்டிய மன்னன், சைவ சமயத்தை துறந்து, பிற சமயத்தை சார்ந்திருந்தான். அவனது மனைவி, சைவத்தின் மீதும், சிவனின் மீதும் எல்லையற்ற பக்தி வைத்திருந்தாள். சம்பந்தரை மதுரைக்கு அழைத்தாள். சம்பந்தரின் வருகையை விரும்பாத மன்னன், அவர் வந்து தங்கிய மாளிகைக்கு தீ வைக்குமாறு தன் பணியாட்களை ஏவினான். இதனை அறிந்த சம்பந்தர், இந்த தீ, பாண்டியனைத் தாக்கட்டும் என்று கூறினார். அடுத்த நொடியில், பாண்டியன் வெப்பு நோயினால் வருத்தமுற்றான்.

பிற சமயத்தோர் என்ன செய்தாலும் அவர்களால் அந்த நோயினை விரட்ட முடியவில்லை. சம்பந்தர், ஆலவாய் அண்ணல் (மதுரை சொக்கநாதர்) அவரின் திருநீற்றினை எடுத்து, மன்னன் மீது பூச, நோய் நொடியில் நொடித்துப் போனது.

அப்போது பாடிய பதிகமே இந்த திருநீற்றுப் பதிகமாகும். இந்த பதிகத்தை ஓதி வந்தால், தீரா நோய்கள் தீரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்திரு நீறே

செந்துவர் வாய் உமை பங்கன் - சிவந்த பவழம் போன்ற வாயுடைய உமைபங்கன் (மாதொரு பாகன்) - சொக்கநாதன் அவனின் திருநீறு -

1. மந்திரம் போன்றது - மந்திரம் என்பது அதனை நினைத்தால், நினைத்தவரைக் காப்பது.
2. வானவர்கள் (தேவர்கள்) யாவரும் பூசிக்கொள்வது.
3. அழகானது.
4. சிறந்த நூல்களால் போற்றப்படுவது.
5. ஆகமங்கள் யாவும் புகழ்வது
6. சிவனிடத்தில் இருப்பது

No comments:

Post a Comment