Thursday, 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றலும், வலிமையும் உடைய விடையின் மீது ஏறிவரும் ஆலவாயானின் திருநீற்றைப் போற்றி, பூசுரனான ஞான சம்பந்தன் செய்த இப்பாடல், தென்னனின் (பாண்டியனின்) வெப்பு நோயினைத் தீர்த்து. இப்பதிகத்தை ஓதுவார்கள், நல்லவர்களாவார்கள்.

திருநீற்றுப் பதிகம் முற்றிற்று.

பதிகத்தை ஓதி, நன்மை அடைவோமாக.

பின் குறிப்பு: நம்மில் பலர் திருநீற்றை (விபூதி) இட்டுக்கொள்வதில்லை. இதன் உயர்வு நமக்கு தெரிவதில்லை. இன்று முதல், நாம் இட்டுக்கொள்வோம்.

நமச்சிவாய வாழ்க!

திருச்சிற்றம்பலம்.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே

அண்டத்தில் உள்ளவர்கள் பணிந்து போற்றும் ஆலவாயானின் திருநீறானது:
1. குண்டிகை - கமண்டலம், சாக்கியர் - சமணர்.
கமண்டலம் ஏந்தும் பௌத்தர்கள், சமணர்கள் ஆகியவர்களுக்கு திகைப்பினைத் தருவது.
2. எண்ணுவதற்கு இனியது.
3. எட்டுத் திசைகளில் வாழும் உணர்வுடயோர்களால் (sensible persons), போற்றப்படுவது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 9

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

ஆலம் - விடம். விடத்தை உண்டு, அதனால் கறுத்த மிடறுடைய (மிடறு - கழுத்து), ஆலவாயனின் திருநீறு,
1. மாலும் (விஷ்ணுவும்), அயனும் (பிரம்மனும்) அறியாத வண்ணம் உடையது. சிவபெருமானின் அடியும் முடியும் காண பிரமனும், விஷ்ணுவும் மேலும் கீழும் தேடி அலைந்து தோல்வியுற்றனர் அல்லவா? அதனால் அவர்களால் அறிய முடியாத வண்ணம் கொண்டது என்கிறார்.
2. வானுலகில் உள்ள தேவர்கள், தங்கள் உடல் முழுதும் பூசிக்கொள்வது.
3. பிறவி என்னும் துயரைத் தீர்க்கவல்லது. பிறவி இல்லை எனில் இன்பமே. அதனால் பேரின்பத்தைத் தர வல்லது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 8

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

அரா - பாம்பு. பாம்புகளை அணிந்த திருமேனி உடைய சிவபெருமான் அவன் திருநீறு,
1. இராவணன் அவன் உடலில் பூசிக்கொண்டு பயன் பெற்றது.
2. நல்ல சிந்தனை கொண்டவர்களால் நினைக்கத் தக்கது.
3. பராவணம் - பரா சக்தி. பராசக்தியின் வடிவமானது.
4. பாவங்களை அறுக்கக்கூடியது.
5. தராவணம் - உயர்ந்த தத்துவம். பிரம்ம ஞானம் ஆனது.
6. தத்துவம் - மெய்ப்பொருள் (பிரம்மம்) ஆனது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 7

எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம் அதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆல வாயான் திருநீறே

அயில் - கூறிய மும்முனைகளை உடைய சூலம்.
சூலத்தைக் கையில் ஏந்திய ஆலவாயானின் திருநீறு,
1. எயில் - மதில். மும்மதில்/மூவெயில் - திரிபுரம். திரிபுரத்தை எரித்தது. திரிபுரம் எரிந்து பின் சாம்பலாக ஆயிற்று.
2. இம்மை, மறுமை ஆகிய இருபிறவிக்கும் பாதுகாப்பு தரவல்லது.
3. அணிவோர்க்கு (அணிந்து பழகியோர்க்கு) பலனைத் தருவது
4. பாக்கியம் - செல்வம். திருநீறே செல்வமாகும். விபூதி என்றால் பெருமை.
5. துயில் - உறக்கம். சோர்வினைத் தவிர்ப்பது.

இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். பகலில் சில சமயங்களில் உறக்கம் வருவது போலோ, தலை வலிப்பது போலோ உணர்ந்தால், திருநீறை நெற்றியில் இட்டுக்கொள்வேன். ஒரு புத்துணர்வு கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை, திருநீறு உறிஞ்சிவிடும் என்று பலர் அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். அதனால் தலைவலி குணமடைகிறது. தோலில் ஏற்படும் அரிப்பு கூட சரியாகி விடும். சர்வ ரோக நிவாரணி.

6. சுத்தமானது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 6

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

அழகிய மாளிகை சூழ்ந்த திருஆலவாய் (மதுரை) என்னும் தலத்து இறைவனின் திருநீறு ஆனது:
1. அருத்தம் - செல்வம். உயர்ந்த மதிப்புடையதாகும்.
2. அவலம் - துயரம்/கவலை தரும் பிறப்பு இறப்பு சுழற்சி. அந்த சுழற்சியைத் துண்டிக்கும்.
3. வருத்தம் (சோகம்/துன்பம்) தீர்ப்பது
4. வானம் - இன்பம் அல்லது அழகு அளிப்பது. வானம் - வனப்பு - அழகு.
5. இட்டுக்கொள்வோர் யாவருக்கும் பொருத்தமாக இருப்பது.
6. புண்ணியம் செய்தோர்களால் பூசப்படுவது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 5

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

சொக்கநாத பெருமானின் திருநீறு,
1. பூசிக்கொள்வதற்கு இனிமையானது
2. புண்ணியத்தை தரவல்லது
3. அதனைப்பற்றி பேசுவதற்கு இனிமையானது
4. பெரிய தவம் புரியும் முனிவர்களுக்கு எல்லாம், ஆசைகளை அறுப்பது
5. முடிவானது (பேரின்ப நிலையைத் தரவல்லது)
6. உலகத்தாலும், அதில் வாழ் மக்களாலும் புகழத் தக்கது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 4

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஈசனின் திருநீறு எப்படிபட்டது?

1. காண்பதற்கு இனியது
2. அழகைத் தர வல்லது
3. அதனை அணிவோர்க்கு பெருமை தரக்கூடியது.
4. மாணம் - இறப்பு. இறப்பினைத் தடுப்பது. மாளுதல் - இறத்தல். மாள் + அம் = மாளம். ள என்பது ண என்று சந்தியில் (புணர்ச்சியில்) மாறும்.
5. அறிவைத் தரும். திருநீறு அணிவதால் நமக்கு தெளிவு பிறக்கும். சோர்வு தீர்வதை நான் அனுபவித்துள்ளேன். சோர்வில்லை எனில், எதுவும் எளிதாகும். அதனால் நாம் நிறைய விஷயங்களை அறியலாம்.
6. சேணம் - உயர் நிலை. உயர்ந்த நிலையினை நமக்கு தரும்.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 3

முத்தித் தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தித் தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தித் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஆலவாய் அண்ணலின் திருநீறு,

1. முக்தித் தரும் - மோக்ஷம்
2. முனிவர்கள் அணிவது
3. சத்தியமானது - அதுவே உண்மை
4. தகுந்தவர்களால் புகழப்படுவது
5. இறைவனிடத்தில் பக்தி உண்டாகச் செய்வது
6. வாழ்த்தத் தகுந்தது (ஒன்றைப் பற்றி புகழ வேண்டுமானால், அதற்கு தகுதி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி உடையது நீறு)
7. அட்டமாசித்திகளை (எட்டு சித்திகள் - அணிமா, மஹிமா, கரிமா, லஹிமா, ப்ராதி, ப்ரகாம்யம், வசித்வம், ஈசத்வம்) தர வல்லது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 2

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

சீதப் புனல் - குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் நிறைந்த வயல்களை உடைய மதுரையில் அருள் புரியும் இறைவனது திருநீறு,

1. வேதங்களால் புகழப்படும் பெருமை வாய்ந்தது. திருநீற்றினை அணிந்த பின்னரே வேத மந்திரங்களை ஓதவும், கர்மங்கள் செய்யவும் வேண்டும்.
2. நம்மை வாட்டக்கூடிய துயரங்களைத் தீர்க்க்கூடியது.
3. மெய்ஞானத்தை (போதம் - சிவ ஞானம்) தரக்கூடியது.
4. (புன்மை) அறியாமையை அழிக்கக் கூடியது.
5. யாவராலும் போற்றத்தக்கது.
6. உண்மையாய் என்றும் நிலைத்து இருப்பது. இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் மிஞ்சி இருப்பது சாம்பல் ஒன்று மட்டுமே.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 1

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை.

பாண்டிய மன்னன், சைவ சமயத்தை துறந்து, பிற சமயத்தை சார்ந்திருந்தான். அவனது மனைவி, சைவத்தின் மீதும், சிவனின் மீதும் எல்லையற்ற பக்தி வைத்திருந்தாள். சம்பந்தரை மதுரைக்கு அழைத்தாள். சம்பந்தரின் வருகையை விரும்பாத மன்னன், அவர் வந்து தங்கிய மாளிகைக்கு தீ வைக்குமாறு தன் பணியாட்களை ஏவினான். இதனை அறிந்த சம்பந்தர், இந்த தீ, பாண்டியனைத் தாக்கட்டும் என்று கூறினார். அடுத்த நொடியில், பாண்டியன் வெப்பு நோயினால் வருத்தமுற்றான்.

பிற சமயத்தோர் என்ன செய்தாலும் அவர்களால் அந்த நோயினை விரட்ட முடியவில்லை. சம்பந்தர், ஆலவாய் அண்ணல் (மதுரை சொக்கநாதர்) அவரின் திருநீற்றினை எடுத்து, மன்னன் மீது பூச, நோய் நொடியில் நொடித்துப் போனது.

அப்போது பாடிய பதிகமே இந்த திருநீற்றுப் பதிகமாகும். இந்த பதிகத்தை ஓதி வந்தால், தீரா நோய்கள் தீரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்திரு நீறே

செந்துவர் வாய் உமை பங்கன் - சிவந்த பவழம் போன்ற வாயுடைய உமைபங்கன் (மாதொரு பாகன்) - சொக்கநாதன் அவனின் திருநீறு -

1. மந்திரம் போன்றது - மந்திரம் என்பது அதனை நினைத்தால், நினைத்தவரைக் காப்பது.
2. வானவர்கள் (தேவர்கள்) யாவரும் பூசிக்கொள்வது.
3. அழகானது.
4. சிறந்த நூல்களால் போற்றப்படுவது.
5. ஆகமங்கள் யாவும் புகழ்வது
6. சிவனிடத்தில் இருப்பது