Thursday, 25 February 2016

திருநல்லம் பதிகம்

ராகம்: ராகமாலிகை
தாளம்: ஆதி (திஸ்ரநடை)

பாடல் - 01
ராகம் - செஞ்சுருட்டி

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 02
ராகம்: ஹம்ஸத்வனி

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 03
ராகம்: புன்னாகவராளி

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 04
ராகம்: நாதநாமக்ரியா

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பாடல் - 05
ராகம் - பிருந்தாவன சாரங்கா

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 06
ராகம்: காபி

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 07
ராகம்: பெஹாக்

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 08
ராகம் - மாண்ட்

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பாடல் - 09
ராகம் - தேஷ்

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பாடல் - 10
ராகம்: திலங்

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பதிக பலன்
ராகம்: சிந்து பைரவி

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 10 February 2016

திருநல்லம் - பதிகத்தின் பலன்

ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி திஸ்ரநடை

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பொருள்:

நலம் தரும் மறையினை ஓதும் வேதியர்கள் வாழும் நல்லத்தில் அருள்பவரும், அழிக்கும் தொழில் புரிய கையில் மழுவை (நெருப்பை) எந்தியவருமான சிவபெருமானை, கொச்சைவயம் (சீர்காழியின் மற்றொரு பெயர்) என்னும் ஸ்தலத்தில் வாழும் ஞானசம்பந்தனால் சொல்லப்பட்ட இந்த பதிகத்தினை சொல்லக்கூடியவர்களின் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை கலை என்று சம்பந்தர் கூறுகிறார். இதிலிருந்து இந்த பதிகத்தின் உயர்வை காண்க.

கொச்சைவயம் என்ற பெயர் ஏற்பட்ட காரணம்:
பராசர முனிவர் மச்சகந்தியை கூடிய பழிச்சொல் (கொச்சை) நீங்க வழிபட்ட ஸ்தலம் ஆதலால் கொச்சைவயம் என்ற பெயர் பெற்றது.

சம்பந்தரிங் முந்தைய பதிகங்களில் சீர்காழிக்கு அவர் கூறிய பிற பெயர்களை நினைவு கொள்வோம்.

திருநெடுங்களம் பதிகத்தில் - சிரபுரம்
திருபிரமபுரம் பதிகத்தில் - பிரமாபுரம்

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 8 February 2016

திருநல்லம் - 10

ராகம்: திலங்
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குறியில் - குறிக்கோள் இல்லாத
குறிக்கோள் இல்லாத சமணர், பௌத்தர் ஆகியோரின், அறிவற்ற உரைகளை (அறிவில் உரை) கேட்டு, ஒரு மணித்துளியும் வீணாக்காதே.

ஒளி மிகுந்த பாம்பினை, தன் இடையில் கட்டிக்கொண்ட அரவார் ஒருவரே, நம்  பொல்லா வினைகளையெல்லாம் தீர்க்க வல்லவர். அவர் அருளும் ஸ்தலமும், தேன் போன்ற இனிமை சூழ்ந்த ஸ்தலமுமான நல்லத்தை நாடுங்கள். நன்மை பெறுங்கள் என்று சம்பந்தர் பாடுகிறார்.

சம்பந்தரின் பதிகங்கள் முன்பு பார்தவையில், 10 ஆம் பாடல், சமண, பௌத்தர்களை கடியும் படி உள்ளது.

திருநெடுங்களம் பாடல் 10
திருபிரமபுரம் பாடல் 10

இரண்டையும் இதனோடு ஒப்பிட்டு பார்க்கவும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 6 February 2016

திருநல்லம் - 09

ராகம் - தேஷ்
தாளம் - ஆதி திஸ்ரநடை

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பொருள்:

நாகத்து அணையான் - நாகத்தினை தலையணையாக கொண்ட விஷ்ணு
நளிர் மா மலரான் - அழகிய தாமரைப் போன்ற முகங்கள் கொண்ட ப்ரம்மா

விஷ்ணுவும், பிரம்மாவும் போகத்தால் அலைமகளோடும், கலைமகளோடும் மகிழ்ந்து இருக்கின்றனர்.

பாம்பினை, தன் இடையில் (நாகம் அரையார்) அணிந்த சிவபெருமானும், அழகே வடிவான மலைமகளோடு அமர்ந்து,  அருள் புரியும் இடம், நல்லம் நகராகும்.

இன்று ப்ரதோஷம். சனி ப்ரதோஷம் மிகவும் விசேஷம். இன்று, பெருமான், அம்மையோடு கூடிய வைபவத்தை த்யானம் செய்தல் மிக உயர்ந்த பலனை அளிக்கும்.

சம்பந்தர் பதிகங்கள் இதுவரை கண்ட மூன்றில், 9-வது பாடலில், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் பற்றிய குறிப்பு காணப்படும்.

திருநெடுங்களம் பாடல் - 9, திருப்பிரமபுரம் பாடல் - 9 காண்க.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 4 February 2016

திருநல்லம் - 08

ராகம் - மாண்ட்
தாளம் - ஆதி திஸ்ரநடை

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பொருள்:

பெண்ணார் திருமேனிப் பெருமான் - தேவியை தன் திருமேனியில் இடப்புறத்தில் கொண்ட பெருமான்

பிறை மல்கு கண்ணார் நுதலினான் - பிறை சூடியவர். நுதல் - நெற்றி. நெற்றியில் ஒரு கண் உடையவர்.

கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை - இலங்கை அரசன் இராவணன் மாபெரும் சிவ பக்தன். கயிலாய மலையினை பெயர்த்து எடுத்து, இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையினை மட்டுமே கொண்டான். சிவபெருமானின் பலத்தை நினைத்துப் பார்க்கவில்லை. பெருமானின் மகிமையினை எண்ணாது கயிலை மலையை பெயர்த்து எடுத்தவனை,

இறையே விரலூன்றி நண்ணார் புரம் எய்தான் - சிவபெருமான், தன் கால் கட்டை விரல் ஒன்றை மட்டுமே பூமியில் ஊன்றி, இராவணனை கயிலை பகுதியை விட்டு வெளியே எறிந்தார். எய்திய அம்பு போல, இராவணன் கீழே விழுந்தான். மேலும் அரக்கர்களின் புரமான திரிபுரத்தை, ஒற்றை அம்பினை எய்தி அழித்தார்.

அவரே, நல்லம் நகர் மேவுபவர்.

சம்பந்தர் பதிகங்களில் இராவணன், சிவபெருமானிடம் தோற்ற சம்பவம் அடிக்கடி இடம்பெறும். திருநெடுங்களம் பதிகம் பாடல் 8 (குன்றின் உச்சி மேல்), திருப்பிரமபுரம் பதிகம் பாடல் 8 (வியரிலங்குவரை) ஆகியவற்றிலும் காணலாம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 3 February 2016

திருநல்லம் - 07

ராகம்: பெஹாக்
தாளம்: ஆதி திஸ்ரநடை

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:

அங்கோல் - அம்+கோல் = அழகிய கொடி.
வளை மங்கை - வளையல்கள் அணிந்த பெண்

அழகிய கொடிபோல் வரிசையாக வளையல்கள் அணிந்த உமா தேவி காண, தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை தன் கையில் ஏந்தியவர் நம் சிவபெருமான்.

நல்ல கொன்றை மலர்களை சூடிய கூந்தல் உடையவர்.

வெங்காடு = இடுகாடு. அதுவே சிவனின் இடம். அந்த இடத்தில், தீயினை கையில் ஏந்தி, தாண்டவம் ஆடி, சம்ஹாரம் (அடக்கம்) என்னும் தொழிலினை புரிகிறார்.

இத்தகு பெயர் பெற்ற நல்ல அரசன் (நங்கோன்), நல்லம் நகர் மேவுபவர் நம்மை ஆள்வார்.

குறிப்பு:
அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். அ + பர்ணா - பர்ணம் - இலை. இலைகள் இல்லாத கொடி போன்றவள் அம்பாள். அதனால் அபர்ணா என்று பெயர். சிவபெருமான் கட்டை மரம் போல், அசைவற்றவர். அவரை கொடிபோல் சுற்றியவள் அம்பாள். இவர்களின் கீழ், கிளைகள் இல்லாத கன்று ஒன்று. அவரே விசாகன் என்ற முருகப்பெருமான். வி + சாகன் = சாகை - கிளை. விசாகை = கிளைகள் அற்றது. சோமாஸ்கந்த மூர்த்தியின் தத்துவம் இதுவே. சிவன் (சோமன்), பார்வதி இருவருக்கும் இடையே முருகனின் (ஸ்கந்தன்) திருவுருவம் இருக்கும். சோம + ஸ்கந்த = சோமாஸ்கந்தன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 2 February 2016

திருநல்லம் - 06

ராகம்: காபி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
வாசனை நிறைந்த மலர்களை சூடிக்கொண்டிருக்கும், மலையரசனின் மகளோடு ஒன்றாக வீற்றிருப்பவர் சிவபெருமான். மலையரசனின் புதல்வி என்பதால், அன்னைக்கு மலைமகள், ஷைலஜா, ஹைமவதி, கிரிஜா என்ற பெயர்கள் வந்தன.

சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொண்டுள்ளது திருநீறு. சுடு நீறு என்று சம்பந்தர் இங்கு கூறியுள்ளார். இடுகாட்டில், தேகங்களை தகனம் செய்தபின் வருவது சாம்பல். அந்த சாம்பலை பெருமான் பூசியுள்ளார். அதனால் சுடுநீறு என்று சம்பந்தர் கூறியுள்ளார்.

திருவெண்காடு என்று ஒரு ஸ்தலம். நவக்ரஹ ஸ்தலங்களுள் புதனுக்கு உரிய ஸ்தலம். ஸ்வேதாரண்யம் என்று சமஸ்க்ருதத்தில் அதற்கு பெயர். சுடுகாட்டில் காணப்படுவது வெள்ளை நிற விபூதி. வெம்மையான காடு அல்லது வெள்ளை நிறக்காடு ஆனதால், வெண்காடு என்று பெயர் பெற்றது.

விரி கொன்றை ஈசன் - விரிந்த சட முடி கொண்ட, கொன்றைப்பூக்கள் சூடிய சிரத்தை உடைய ஈசன்.

ஈசனின் பெயரை உள்ளம் உருக பாடினால், நம் வினைகளை நாசம் செய்வார். உருகி என்பது, வழக்கில் உள்கி என்றானது.

அப்படிப்பட்ட, வினைகளின் நாசன், நம்மை ஆள்வார். அவரே நல்லம் நகர் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 1 February 2016

திருநல்லம் - 05

ராகம் - பிருந்தாவன சாரங்கா
தாளம் - ஆதி திஸ்ரநடை

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
மணியார் திகழ் கண்டம் - சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டு, அதனை தன் கழுத்துப்பகுதியில் நிறுத்தியதால், மணி போல் அந்த பகுதி, பருத்துக் காணப்படும்.

மலர் மல்கு பிணி வார் சடை எந்தை - மலர்கள் பிணைந்து காணப்படும் சடையினை உடைய என் தந்தை

மணி போன்ற கழுத்துப்பகுதியை உடையவரும், மலர்கள் தரித்த சடையினை உடையவரும், நம் தந்தையானவருமான நம் பெருமானின் கழல்களை, மலர்கள் கொண்டு தொழுது போற்றும் அடியார்களால் சூழப்பட்டவருமான நல்லம் நகரான், ஸ்ரீ உமாமஹேச்வரர் நம்மை காக்கட்டும்.

 பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 27 January 2016

திருநல்லம் - 04

ராகம்: நாதநாமக்ரியா
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குளிர்ந்த சந்திரனை சூடியவர். கொன்றைப் பூக்கள் அலங்கரிக்கும் தாழ் சடை உடையவர்.

பளீர் என்று மிளிரும் முனிவர்கள் அணியக்கூடிய மரவுரி (மர வோடு - புலித்தோல்) அணிந்தவர். வெண்மையான முப்புரி நூலினையும் (பூணூல்) தன் மார்பில் தரித்துள்ளார்.

இடது பாகத்தில், தையல் (அழகிய சிறிய வடிவம் கொண்ட பெண்) - பார்வதியை தாங்கியவர்.

நன்றாக விளையும் வயல்களால் சூழப்பட்ட நல்லத்தின் நாயகன், நம் சிவபெருமான். இதிலிருந்து, திருநல்லத்தில், சம்பந்தரின் காலத்தில் இருந்த செழிப்பினை தெரிந்துக்கொள்ளலாம்.

சிவபெருமானின் சடை, தாழ் சடை என்று மற்றொரு பக்தரான பேயாழ்வார்  (சென்னை திருமயிலையில் அவதரித்தவர். ஸ்ரீ மந் நாராயணனின் நந்தகி என்னும் கத்தியின் அம்சம்) பாடிய பிரபந்த பாடல் பறைசாற்றுகிறது. திருமலையில் உள்ள மூர்த்தத்தில், இரண்டு உருவும் ஒன்றாக தெரிகிறது என்று பாடுகிறார். ஹரி-ஹரன் பேதம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றும் - ஆல்
சூழும் திரண்டு அருவிப் பாயும் திருமலை மேல்
எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

தாழ் சடை - சிவன்
நீள் முடி - விஷ்ணு
ஒண் மழு - ஒளி பொருந்திய அக்னி - சிவன் தாங்கியுள்ளார்
சக்கரமும் - சுதர்ஷன சக்ரம் - விஷ்ணுவின் கையில் உள்ளது
சூழ் அரவு - பாம்பு - சிவனின் கழுத்தில் சூழ்ந்திருக்கும்
பொன் நாண் - பொன்னால் செய்த கயிறு - விஷ்ணு அணிந்திருப்பது

கடலால் சூழப்பட்ட இவ்வுலகில், திரண்டு அருவி பாயும் திருமலையில் வசிக்கும் எந்தையின்  (என் தந்தை - வெங்கடாசலபதி) உருவத்தில், இரு உருவமும் ஒன்றாய் இசைந்துள்ளது. சங்கர நாராயணன் என்று போற்றுகிறோமே, அதைத்தான் ஆழ்வாரும் பாடுகிறார்.

சங்கர நாராயண கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் விஷ்ணு. அர்த்தநாரீச்வர கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் பார்வதி.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாராயணன், நாராயணீ, சிவன் எல்லாம் ஒரே பிரம்மத்தின் மாய தோற்றங்கள். ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாள், இந்த தத்துவத்தை கூறியுள்ளார். ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் தெய்வத்தின் குரல் நூலில் தெளிவு படுத்தியுள்ளார்.


பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 26 January 2016

திருநல்லம் - 03

ராகம்: புன்னாகவராளி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:

அந்தி - மாலை
மதி - நிலா
அரவம் - பாம்பு

சிவபெருமான் தலையில் அணிந்துள்ள மாலை நேர சந்திரன் (குளிர்ந்த சந்திரன் என்று பொருள் கொள்ளவேண்டும்), பாம்பு, சடை முடி ஆகியவை தாழ்ந்து சாயுமாறு,  தாருகாவன முனிவர்கள், முன் ஒருமுறை, சிவபெருமான் மீது எய்த மான், தீ, முயலகன் என்னும் அரக்கன் (காட்டெரி) ஆகியவற்றை தன் கைகளில் ஏந்தினார்.

பெருமான், தன் ஒரு கையில் அனலினை ஏந்தினான். மறுகையில் மானினை வைத்துக்கொண்டான்.

ம்ருகதரன் என்று சிவபெருமானுக்கு ஒரு பெயர். ம்ருக - மான், தரன் - கையில் கொண்டவன்.

முயலகனை, தன் காலுக்கு கீழே தள்ளி, வலது காலை அவன் மீது ஊன்றி, அவன் வெளியே வரமுடியாமல் செய்தார். இடது காலை தூக்கி, நடனம் ஆடினார். தூக்கிய திருவடி என்பதால் குஞ்சிதபாதம் என்று பெயர் பெற்றார்.

இவ்வாறு, சிவபெருமானின் நாமங்களை சிந்தித்து தொழுபவர்களின் தீராத வினைகளை எல்லாம் பெருமான், எளிதில் தீர்த்து வைப்பார். *நந்தியும் அவரே. நல்லம் நகரின் நாயகன் நம்மை ஆள்வான்.

*திருமூலர் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று விநாயக பெருமானை போற்றிய துதியில், நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினை என்று பாடுகிறார். நந்தி மகன் என்பது சிவனின் மகன் என்று பொருள் படுகிறது.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 25 January 2016

திருநல்லம் - 02

ராகம்: ஹம்ஸத்வனி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பொருள்:
தக்கன் - தக்ஷன்
தக்ஷன், தன் மருமகன் சிவனை அழைக்காமல், ஒரு வேள்வியினை நடத்தினார். அதனால் கோபமுற்ற உமையம்மை, தன் தந்தையை பார்த்து நியாயம் கேட்க சென்றாள். தக்ஷன் தன் பெண்ணான தாக்ஷாயணியையும் மதிக்கவில்லை. மனம் உடைந்து, தாக்ஷாயணி அந்த வேள்வித்தீயில் குதித்து மாண்டாள். செய்தியை கேள்வியுற்ற சிவபெருமான், தன் சேவகரான வீரபத்ரரை வேள்வி நடக்கும் இடத்திற்கு அனுப்பி, வேள்வியை அழித்தார். அதோடு அங்கு கூடியிருந்தோரையும் ஓட ஓட விரட்டினார்.

பல தேவர்களும் சிவபெருமானை மதிக்காது நகைத்தனர். பகன் என்ற 12 ஆதிதர்களுள் ஒருவன், தை மாதத்திற்கான ஆதித்யன், இந்நிகழ்வை பார்த்து இடி இடியென சிரித்தான். கோபமுற்ற வீரபத்ரர் அவனது பல்லினை உடைத்தார். அதனால் தான் பொங்கல் திருவிழாவின் போது, சூர்யநாராயண பூஜை செய்யும் போது, சர்க்கரை பொங்கலிற்கு முந்திரி பருப்பு போடாமல் நிவேதனம் செய்யும் வழக்கம் இருக்கிறது.

சிவபெருமான் பின்னர் தீயில் சிதைந்த உமையம்மையை தன் சிரத்தில் தூக்கிக்கொண்டு அண்டம் முழுதும் சுற்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். ஆடியதன் விளைவாக அம்மையின் உடல் பாகங்கள் இந்த பாரத தேசத்தின் பல இடங்களில் சிதறி விழுந்தன. அந்த இடங்களே, 51 சக்தி பீடங்கள் ஆகும். சிவனின் இந்த செயல் அமரர்களுக்கு துக்கத்தினை கொடுத்தது.

சிவபெருமான், தன் பொன்னிறமாக மிளிரும் சடையில் கொக்கின் இறகினையும், குளிர்ந்த பிறைச்சந்திரனையும் சூடியுள்ளார். சிவபெருமானிற்கு வெள்ளை நிறத்தில் ஒரு தனி ப்ரியம். தும்பை மலர்கள் கொண்டு பூஜை செய்தால் விசேஷம். கொக்கின் இறகு, சந்திரன் ஆகியவை வெள்ளை நிறம். அவர் உடல் முழுதும் பூசிக்கொள்ளும் சாம்பல், வெள்ளை நிறம்.

நல்லோனான அவர், நல்லதில் மேவும் அரசனான அவர், நம்மை ஆண்டு காக்கட்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Sunday, 24 January 2016

திருநல்லம் - 01

ராகம் - செஞ்சுருட்டி
தாளம் - ஆதி (திஸ்ரநடை)

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பொருள்:

ஆலாகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷமானது, தொண்டைக்கு கீழே இறங்கி உள்ளே செல்லாமல், உமையம்மை தன் கரங்களை சிவபெருமானின் கழுத்தில் வைத்தாள். அவளின் மாங்கல்ய பாக்யத்தால், சிவபெருமானின், கழுத்தில் அந்த விஷம் அதே இடத்தில் நின்றது. அதனால், அவரது தொண்டைப்பகுதி, நீல நிறமானது. நீலகண்டன், நீலக்ரீவன் என்று பெயர் பெற்றார்.

இங்கு சம்பந்தர், சிவபெருமானை, கறைசேர் கண்டா என்று பாடுகிறார். நிழல் பட்டால் போல், அவர் தொண்டைப்பகுதி, கறை தோய்ந்ததாக உள்ளது.

கல் ஆல மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்த தேவர்கள் (இமையோர்), இவ்வாறு அவரவர்களுக்கு தெரிந்த பல மொழிகளால், சிவபெருமானை தொழுது பாடுகின்றனர். தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள். அதனால் இமையோர் என்று சம்பந்தர் பாடுகிறார்.

சிவ குரு, தக்ஷிணாமூர்த்தி, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிகளுக்கு, மௌன உபதேசம் செய்வதாக நூல்கள் கூறுகின்றன. நாமும் சித்திரத்திலும், சுதை வேலைப்பாடுகளிலும், சிற்பங்களிலும் காண்கிறோம்.

ஒரே ஒரு வில்லினை எய்தி, அரக்கர்களின் திரிபுரத்தை (மூன்று மதில்கள் கொண்ட சிறந்த காவல் நிறைந்த நகரம். அரண் - மதில்) எரித்து வீழ்த்தினார்.

இப்படிப்பட்ட சிறப்புகள் பல பெற்ற நல்லவன், நம்மை ஆள்வான். நல்லம் நகர் மேவும் இறைவனும் அவரே.

சிறப்பு குறிப்பு:
இத்தலத்தில் புரூரவஸ் மஹாராஜா செய்த துதியில், சிவபெருமான், திரிபுரத்தை தன் வில்லினை ஒத்த புருவத்தினை வில்லாகவும், தன் நெற்றிக்கண்ணினை அம்பாகவும் கொண்டு, தன் பார்வையாலேயே எரித்து வீழ்த்தியதாக போற்றியுள்ளார்.

மேலும் ஸ்கந்த புராணத்தில், சிவபெருமான், தன் புன்சிரிப்பினால் மட்டுமே அழித்ததாக ஒரு விளக்கம் வரும்.

திரிபுர சம்ஹரதிற்கு, விஷ்ணு அம்பாகவும்,ஆதி சேஷன் நாணாகவும், மற்றும் தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருவியாகவும் வர முற்பட்டு, சிவபெருமான் அவர்களின் துணைக்கொண்டு அழிப்பதாக இருந்தார். தேவர்களுக்கு, தங்கள் உதவி கொண்டு சிவபெருமான் பெரும் செயல் செய்யவிருக்கிறார் என்று கர்வம் கொண்டனர். அதனால் அவர்களின் கர்வத்தை அழிக்கும் பொருட்டு, தனது பார்வை என்னும் ஒற்றை அம்பு கொண்டு திரிபுரத்தை அழித்தார்.

சிறப்பு குறிப்பு கொடுத்தமைக்கு, திரு S,பாலசுப்ரமண்யன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்த திருநல்லம் கோவிலில் உள்ள த்ரிபுராந்தக வடிவம், மிகவும் அற்புதமான ஒன்று.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 23 January 2016

திருநல்லம் - கோனேரிராஜபுரம்


திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம், ஒரு சிறிய அழகிய கிராமம். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், வடமட்டம் என்னும் ஊருக்கு முன் கோனேரிராஜபுரம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 24 km தொலைவில் இந்த ஸ்தலம் திருநல்லம் உள்ளது.

திருநல்லம் என்னும் இந்த புனித ஸ்தலம், பவிஷ்யோத்தர புராணம், ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. பூமி தேவி, ஹிரண்யாக்ஷனால் கவரப்பட்டு, கடலுக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம், பின் மஹா விஷ்ணு வராஹ ரூபம் கொண்டு, பூமி தேவியை காப்பாற்றி நிலை நிறுத்திய சம்பவம் பலர் அறிந்ததே. பூமி தேவி, இது போல் தடங்கல்கள் தனக்கு வராமலிருக்க வழி யாது என்று மஹா விஷ்ணுவை கேட்டாள். அதற்கு விஷ்ணு கூறிய வழி, "சிவபெருமானை, பத்ராச்வத்த வனத்தில் சென்று பூஜை செய்து வருவாயாக" என்றார். அந்த பத்ராச்வத்த வனமே நல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம். பூமேஸ்வரம்,ப்ரித்திவீஸ்வரம், பத்ராச்வத்த வனம், திருநல்லம் ஆகியன இந்த ஸ்தலத்தின் வேறு பெயர்கள்.

ஸ்தல சிறப்பு:
1. பூமி தேவி பூஜித்த ஸ்தலம். பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. பூமி தேவி 5 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு துதியினை இறைவன் மீது பாடியுள்ளார்.
2. புரூரவஸ் என்னும் அரசன், கர்க முனியின் சாபத்தினால், குஷ்ட ரோகத்தால் பீடிக்கப் பெற்றான். இந்த ஸ்தலத்தில், வைத்யநாத ஸ்வாமியை ப்ரதிஷ்டை செய்து பூஜித்து, தன் ரோகம் தீர்ந்து மகிழ்ந்தான். வைத்யலிங்கம், நந்தி இல்லாமல் இருக்கும். மேற்கு முகமாக அமையப்பெற்றது. புரூரவஸ் சிவபெருமானை ஒரு அற்புத ஸ்தோத்திரம் கொண்டு துதித்தார்.
3. தர்மத்வஜன் என்னும் மாளவ தேசஅரசன், ஒரு ப்ராம்மனரின் சாபம் பெற்று, பிரம்மராக்ஷஷனாக திரிந்தான். பின்னர் இந்த ஸ்தலத்தில் உள்ள ஞானகூபம் என்னும் கிணற்றின் தீர்த்தத்தை பருக, சாப விமோசனம் கிடைத்து, ராஜஸ்வரூபத்தை திரும்ப பெற்றான்.
4. முரன்டகன் என்னும் சிறுவன், ரதீதர மகரிஷியின் சிஷ்யர் குலவர்தனனின் மகன். கண்வ மகரிஷியை அவன் அறிந்ததில்லை. அதனால், அவர் உணவு கேட்டப்போது மறுத்தான். அவர் சாபமிட்டார். பிசாசாக அலைந்தான். இங்கு வந்து உமா மகேஸ்வரரை தொழுததால், சாபம் நீங்கப்பெற்றான்.
5. தர்ம சர்மா என்ற ஒரு ப்ராம்மனரின் தரித்ரம் நீங்கி, அவர் செல்வ செழிப்போடு வாழ்ந்தார். பல தர்மங்களை செய்தார்.
6. மிகப்பெரிய நடராஜ பெருமானின் மூர்த்தம் இங்கு உள்ளது.
7. ஞான சம்பந்தர், நாவுக்கரசர் (அப்பர்) ஆகியோரால் பாடல் பெற்றது.

இவை ஒரு சிறிய விளக்கமே. இந்த ஸ்தலத்தின் மஹிமையை பற்றி எழுத ஒரு தனி பதிவு வேண்டும். அதனால், இனி சம்பந்தர் இந்த ஸ்தலத்தில் பாடிய பதிகத்தை பார்போம்.

ஸ்வாமி - உமா மகேஸ்வரர்
அம்பாள் - தேக சுந்தரி / அங்கவள நாயகி

உமா மகேஸ்வரரைத் தவிர, புரூரவஸ் ப்ரதிஷ்டை செய்த வைத்யநாத ஸ்வாமி, கண்வர், அகஸ்தியர், சனத் குமாரர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ப்ரதிஷ்டை செய்த 5 லிங்கங்கள் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகிய 7 லிங்கங்கள் (மோக்ஷ லிங்கம்) உள்ளன.

இவற்றைத்தவிர, 8 திக்பாலகர்கள் எழுப்பிய 8 கோவில்கள், தீர்த்தங்கள்  இந்த ஸ்தலத்தை மையமாக வைத்து, சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ளன. தேவலோக சிற்பி விஸ்வகர்மா, சித்தேஸ்வரர் என்ற ஒரு சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

இந்த ஆலயத்தை புராண காலத்தில் எழுப்பியவரும் விஸ்வகர்மா. பின்னர் புரூரவஸ், தன் ரோகம் நீங்கிய மகிழ்ச்சியால், இந்த ஸ்தலத்தின் கருவறை மேல்  உள்ள மிகப்பெரிய விமானம், அதி விமானத்தை, தங்கத்தால் பூசி சிறப்பு செய்தார்.

அடுத்த பதிவிலிருந்து பதிகத்தை அனுபவிப்போம்.

ஓம் நம சிவாய.

Friday, 22 January 2016

திருநெடுங்களம் - இடர் களையும் பதிகம்

தாளம்: ரூபகம் (சதுஸ்ர ஜாதி)

பாடல் 1
ராகம்: தேவகாந்தாரி

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 2
ராகம்: பேகடா

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 3
ராகம்: சாவேரி

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத  
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும் 
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே 

பாடல் 4
ராகம்: மோகனம்

மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 5
ராகம் - அடானா

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 6
ராகம் - பந்துவராளி

விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 7
ராகம் - சஹானா

கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 8
ராகம் - சாரங்கா

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 9
ராகம் - கேதாரம்

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் 10
ராகம் - பைரவி

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பாடல் - நூற்பயன் 
ராகம் - மத்யமாவதி

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 21 January 2016

திருநெடுங்களம் - பதிகத்தின் பலன்

ராகம் - மத்யமாவதி
தாளம் - ரூபகம்

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே

பொருள்:

நீண்டு, வளர்ந்துக்கொண்டே இருக்ககூடிய சடை முடி தரித்த சிவபெருமான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் ஊரும், பெரிய வீதிகள் நிறைந்த ஊருமான சீர்காழியின்   (சிரபுரம்) தலைவன் (கோ), ஞானசம்பந்தன், பாடிய,  நன்மை தரவல்ல இந்த பத்துப் பாடல்களை பாடுவோரின் பாவங்கள் யாவும் தொலைந்துப்போவது உறுதி.

சீர்காழியில் பிறந்த புலவர்களுள் தலைச்சிறந்த ஞானசம்பந்தர், சீர்காழியின் தலைவன் என்று தன்னை சொல்லிக்கொள்வதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இருக்காது என எண்ணுகிறேன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 20 January 2016

திருநெடுங்களம் - 10

ராகம் - பைரவி
தாளம் - ரூபகம்

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

வெஞ்சொல் - கொடுமையான சொற்கள்
தஞ்சொல் - தன் சொல்

கொடிய சொற்களையே தங்கள் சொற்கள் என்று கொள்ளும்படியான சமணர்கள், நல்ல சங்கம் இல்லாத பௌத்தர்கள், இவர்கள் இருவரும், வேதம் கூறும் உண்மைப் பொருளை அறியாதவர்கள். அவர்களை விடுத்து, அழியாப்புகழுடை வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை, தங்கள் நெஞ்சில் வைத்து வாழும் அடியவர்களின் துயரங்களை, போக்குவாயாக என்று நெடுங்களம் வாழ் இறைவனை சம்பந்தர் பாடுகிறார்.

பௌத்தம், சமணம் இந்த இரு மதங்களும், வேதத்தை பொய் என்று சொல்கின்றன. அதனால், சம்பந்தர் அவர்களின் சொல்லை கொடிய சொல் என்று உரைக்கிறார். வேதத்தை மறுப்பவர்கள் நாஸ்தீகர்கள். வேதத்தை மதிப்பவர்கள் ஆஸ்தீகர்கள். இன்று இப்பொருள் திரிந்து காணப்படுகிறது! அக்கால நாஸ்தீகர்கள், வேதம் இல்லை என்று சொன்னார்கள். அவர்களுக்கு கடவுள் என்று ஒருவர் இருந்தார். இன்று?

வேதத்தை தழுவி நிற்கும் வைதீக மதத்தை சம்பந்த பெருமான், போற்றுகிறார் என்று இதிலிருந்து நாம் அறிய வேண்டும். வேதத்தை, துஞ்சல் இல்லா வாய்மொழி என்று இங்கே கூறுகிறார். அழியாப் புகழ் கொண்ட சத்தியம் - வேதம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 19 January 2016

திருநெடுங்களம் - 9

ராகம் - கேதாரம்
தாளம் - ரூபகம்

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

வேழ வெண்கொம்பு - யானையின் வெள்ளை தந்தம்.
மால் - விஷ்ணு.
ஒசித்த - ஒடித்த.

மஹாவிஷ்ணு, கிருஷ்ண அவதாரத்தில், குவலயாபீடம் என்ற யானையோடு சண்டையிட்டு, அதனை கொன்று, அதன் தந்ததை உடைத்தார்.

விளங்கிய நான்முகன் - பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் கொண்ட பிரம்மா.

விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி காண எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவர்களால் முடியவில்லை. இறுதியில், அவர்கள் முன், நீண்ட ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் நின்றார். லிங்கோத்பவ மூர்த்தியின் தாத்பர்யம் இதுவே. ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி என்று மாணிக்கவாசகர், திருவெம்பாவையில் சிவபெருமானை பாடுகிறார்.

கேழல் - பன்றி. விஷ்ணு, வராஹ ரூபம் கொண்டு சிவனின் பாதத்தைக் காண முயற்சி செய்தார். காண முடியாததால், சிவன், தான் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக, அந்த வராஹத்தின், கொம்பு ஒன்றை உடைத்து, தான் அணிந்துக்கொண்டார்.

வராஹத்தின், கொம்பினை அணிந்த பெருமானின், கேடில்லாப் பொன்னடியின் (தீமை இல்லாத பொற்பாதங்கள்) நிழலில் வாழும் அடியார்களின் இடர்களை நீக்குவாய் என்று திருநெடுங்களப்பெருமானை வேண்டுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 18 January 2016

திருநெடுங்களம் - 8

ராகம் - சாரங்கா
தாளம் - ரூபகம்

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

குன்று - மேரு மலை
மேரு மலையிலிருந்து வாயு பகவான், மூன்று சிகரங்களை பெயர்த்து எடுத்தார். அதனை ஒன்றாக்கி, அதில் மேல் ஒரு நகரத்தை ஸ்தாபனம் செய்தார். அந்நகரமே இலங்கை. அந்த லங்காபுரியை சுற்றி உள்ள மதில்களில், நிறைய கொடிகள் கட்டப்பட்டிருக்கும். அதனால் சம்பந்தர் இங்கே, குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை என்று பாடுகிறார்.

அரக்கர் கோன் - அரக்கர்களின் தலைவன், ராவணன். இலங்கையின் அதிபதி.

ஒருமுறை ராவணன், ஸாமகானம் செய்து, சிவபெருமானை மயக்கி, கயிலாய மலையையே இலங்கைக்கு எடுத்துச்செல்லலாம் என்று திட்டம் தீட்டினான். அவனது சூழ்ச்சியை அறிந்த நம்பெருமான், தன் கால் கட்டை விரலை சற்று பலமாக அழுத்தி, ராவணனை அந்த கயிலை மலைக்கு கீழே தள்ளி, வெற்றிக்கொண்டார்.

இவ்வாறு இரவும் பகலும், பல நல்ல துதிகளை பாடி, இறைவனையே போற்றி, மனம் உருகும் அடியார்களின் துன்பத்தை நீக்கி அருளவேண்டும் என்று நெடுங்களம் மேவும் பெருமானை சம்பந்தர் வேண்டுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Sunday, 17 January 2016

திருநெடுங்களம் - 7

ராகம் - சஹானா
தாளம் - ரூபகம்

கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

கூறுகொண்டாய் - இறைவன் தன் உடலின் ஒரு பாதியை உமையம்மைக்கு தந்தார்.

மூன்றும் ஒன்றாக் கூட்டி - விஷ்ணு, அக்னி,வாயு ஆகிய மூவரின் சக்திகளையும் ஒன்றாக திரட்டி

ஓர் வெங்கணையால் - அந்த சக்தியை ஒரு கூரிய அம்பாக மாற்றி

மாறு கொண்டார் - அசுரர். மாறுபட்ட கொள்கைகள் உடையவர்கள் ஆதலால் அசுரர்களை மாறுகொண்டார் என்று சம்பந்தர் கூறுகிறார். இறைவனை தலைவனாக ஒப்புக்கொண்டால், அது நேரான கொள்கை. இல்லையேல் அது மாறுபட்ட கொள்கை.

புரமெரித்த மன்னவனே - அசுரர்களின் ஊரான, திரிபுரத்தை எரித்த மன்னவன்.

கொடிமேல் ஏறு கொண்டாய் - இறைவனின் கொடி, ஏறு - ரிஷபம்.

சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே - எம்பெருமான் அணிந்த திருநீற்றை மணம் வீசும் சந்தனம் என்று கருதி தங்கள் நெற்றியில் அணியும் பக்தர்களின் இடர்களை களைவாய் நெடுங்களம் மேவும் இறைவனே!

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 14 January 2016

திருநெடுங்களம் - 6

ராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்

விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

திருநெடுங்களத்தில் அருளும் இறைவா, நீயே (விருத்தன் - முதியவன்) முதுமை வேடம் தரித்தும், இளமை வடிவம் கொண்டும் வேதங்கள் நான்கினையும் நன்கு உணர்ந்த தலைவன் (கருத்தன்).  நீயே கங்கையினை மனம் கமழும் நின் சடையின் மேல் வைத்துக்கொண்டாய். நீயே ஞானமே வடிவான முதற்கடவுள் (ஆதி தேவன்).  உனது திருவடிகளே துணை என்று  போற்றி ஆடியும், பாடியும் தொழும் அடியார்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 13 January 2016

திருநெடுங்களம் - 5

ராகம் - அடானா
தாளம் - ரூபகம்

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

பாங்கினல்லார் - பாங்கில் நல்லவர் - குணங்களால் நல்லவர்கள் (அ) நற்பண்புகள் உடையவர்கள்

படிமஞ்செய்வார் - படிமம் செய்வார் - தவம் செய்பவர்கள்

பாரிடமும் - பாரில் வாழும் பிறர்

நெடுங்களத்தில் மேவும் இறைவனே, நீ, நற்குணங்கள் உடையவர்கள், தவம் மேற்கொள்பவர்கள், பாரில் வாழும் இல்லறத்தோர் ஆகியோரிடமிருந்து பலி (பிக்ஷை) வாங்குகிறாய். உனது இந்தச் செயலில் மனம் ஒன்றி, நல்லோர் பாடும் பாடல்களால் தொழத்தக்க நின் திருவடிகளை வணங்கி, அந்த திருவடி நிழல்களிலிருந்து விலகாத அடியவர்களின் இடர்களை களைய வேண்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 12 January 2016

திருநெடுங்களம் - 4

ராகம்: மோகனம்
தாளம்: ரூபகம்

மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

நெடுங்களத்தில் இருக்கும் இறைவனே, இமவானின் மகளை நீ உனது உடலில் ஒரு பாதியாகக் கொண்டு மகிழ்பவன். அலைகள் பொங்கும் கங்கையினை, உன் சடையில் தாங்கிக்கொண்டாய்.

அவிர் சடை - கட்டாத சடை முடி.
ஆரூரா - திருவாரூரிலும் அருள்பவன் நீயே.

பிரம்மாவின் 5 ஆம் தலையை கொய்ததால், அந்த தலையின் கபாலம் (மண்டை ஓடு) உன் கையில் ஒட்டிக்கொண்டது. அதனை கையில் ஏந்தி பிக்ஷை செய்வதில் மகிழ்பவன். உனது திருவடிகளின் கீழ் நிலையாக நிற்பதில் என்றும் மகிழ்வுறும் உன் அடியார்களின் இடர்களை நீக்குவாயாக.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 11 January 2016

திருநெடுங்களம் - 3

ராகம்: சாவேரி
தாளம்: ரூபகம் 

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத  
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும் 
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே 

பொருள்:
நெடுங்களம் மேவும் இறைவனே, தூயவனே (நிமலா), உனது திருவடியை வழிபட்ட மார்கண்டேயனை, யமனின் பிடியிலிருந்து விடுவித்து காத்தாய். என் அடியவனின் உயிரை பறிக்காதே என்று கூற்றுவனை (யமனை) கடிந்து,  அந்த யமனை காலால் உதைத்தாய். அந்த திருப்பாதங்களை நாளும் பூக்கள், நீர் ஆகியவற்றைக் கொண்டு வழிபட்டு (அபிஷேகம் செய்து, அர்ச்சித்தல்) வரும் அடியார்களின் துன்பத்தை போக்குவாயாக.

நிமலா - மாசற்றவன், தூயவன். மாசற்ற ஜோதி என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் இறைவனை குறிப்பிடுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday, 8 January 2016

திருநெடுங்களம் - 2

பாடல் 2
ராகம்: பேகடா
தாளம்: ரூபகம்

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

கனைத்தெழுந்த - கனைத்து எழுந்த - சப்தம் செய்துக்கொண்டு எழுந்த

வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் - வெண்மையான அலைகள் என்னும் திரையினால் மூடப்பட்ட கடலிலிருந்து (திருப்பாற்கடல்) தோன்றிய நஞ்சினை உண்டு

தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ - அந்த சிறிதளவு நஞ்சினை நின் தொண்டையில் நிறுத்திக்கொண்ட தேவனே,

நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் 
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே - உன்னை உள்ளத்துள் நினைத்து, இரவு பகலாக, ஆடி பாடி நினைத்து வழிபடும் அடியார்களின் துயரங்களை தீர்ப்பாய், நெடுங்களம் மேவும் இறைவனே!

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 7 January 2016

திருநெடுங்களம் - 1

இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276-ல், சோழ நாட்டில், காவிரி தென்கரை ஸ்தலங்கள் 128-ல், 8-வது ஸ்தலம். திருச்சியிலிருந்து துவாக்குடி செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது.

இறைவன் நாமம் - நெடுங்களநாதர் (அ) நித்திய சுந்தரேஸ்வரர்
இறைவி நாமம் - ஒப்பில்லாநாயகி (அ) மங்களாம்பிகை

சம்பந்தர் பதிகம் பெயர்: இடர் களையும் பதிகம்

பாடல் 1
ராகம்: தேவகாந்தாரி
தாளம்: ரூபகம் (சதுஸ்ர ஜாதி)

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:
மறை உடையாய் - வேதத்தினை உடைமையாய் உடையவன்
தோலுடையாய் - புலித்தோல், யானைத்தோல், மான்தோல் போன்ற தோல்களை ஆடையாய் உடுத்தவன்.
வார் சடை மேல் பிறை உடையாய் - சடையில், வளரும் பிறைச்சந்திரனை அணிந்தவன்.
பிஞ்ஞகனே - பெரியோனே
இவ்வாறு பெருமானை வாழ்த்தி வந்தால், நாம் குறைகள் பல செய்தாலும்,  நம்மையும் நாம் செய்த குறைகளையும் இறைவன் மன்னிப்பார்.
உயர்ந்த கொள்கைகள் உடைய அடியவர்கள் எப்போதும் இறைவனையே நினைப்பார்கள். நெடுங்களம் மேவும் இறைவன்அவர்களது இடர்களை நீக்கி அருள் புரிவார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 5 January 2016

திருக்காழி - பிரமாபுரம் (சீர்காழி)

வினைத் தீர்க்கும் பதிகம்
தாளம்: ஆதி, திஸ்ர நடை

பாடல் - 1
ராகம் - நாட்டை

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

பாடல் - 2 
ராகம்: கௌளை

முற்றல் ஆமை இள நாகமோடு என முளைக்கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடுகலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 3
ராகம் - ஆரபி

நீர் பரந்த நிமிர் புன் சடை மேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம்கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இதுவென்ன
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 4
ராகம்: வராளி

விண்மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உண்மகிழ்ந்து பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 5
ராகம் - ஸ்ரீ

ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன், என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இதுவென்ன
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 6
ராகம் - நாட்டைக்குறிஞ்சி

மறை கலந்த ஒலி, பாடலொடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 7
ராகம் - அம்ருதவர்ஷினி

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வெய்த
உடை முயங்கும் அரவோடு இழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ்குளிர் கானல் அம்பொன் அம்சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 8
ராகம் - கானடா

வியரிலங்குவரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர் கள்வன்
துயரிலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 9
ராகம் - பிலஹரி

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டாமரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்த
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பாடல் - 10
ராகம்: ரேவதி

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இதுவென்ன
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

நூற்பயன்
ராகம் - சுருட்டி

அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

பாடல் முழுதும் கேட்க:

Check this out on Chirbit

Monday, 4 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - (நூற்பயன்) - 11

நூற்பயன்
ராகம் - சுருட்டி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

பொருள்:

அருமையான நெறிகளை பயிற்றுவிக்கும் வேதத்தில் வல்ல முனிவர் - பிரம்மா. அவர் பொய்கையில் வளரும் மலரில் (தடாகத்தில் வளரும் மலர் - தாமரை) வசிப்பவர். நன்னெறி நிறைந்த பிரமாபுரத்தில் பிரம்மா சிவபெருமானை பூஜித்தார். இந்த பிரமாபுரம் மேவிய சிவபெருமானை, ஒருமனதோடு வழிபட்டு உணர்ந்த திருஞானசம்பந்தர் இயற்றிய இந்த 10 பாடல்கள் கொண்ட வினைக்களையும் பதிகத்தை பாராயணம் செய்வோரின் பழவினைகள் யாவும் எளிதில் தீரும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 2 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - 10

பாடல் - 10
ராகம்: ரேவதி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இதுவென்ன
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

புத்தம், சமணம், காபாலிகம், பூர்வ மீமாம்சம் போன்ற பிற வழிகளை பின்பற்றி, நெறி தவறி, சைவத்தை புறம் கூறுவோர்களின் சொல் ஒருநாள் மறைந்து போகும். ஏனெனில் சனாதன தர்மமே (அத்வைத தத்துவம்) நிலையான ஒன்று. அத்வைதமே சத்தியம்.

இந்த சைவ நெறியின் தலைவன், சிவபெருமான், உலகம் முழுதும், பிக்ஷை எடுத்து வருவதில் உள்ளம் மகிழ்வார். அதாவது தனக்கு என்று ஒன்றும் சேர்த்துக்கொள்ளாமல், அன்றாடத்திற்கு தேவையானவற்றை வைத்துக்கொண்டு, எல்லாருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். வருவதை பகிர்ந்து உண்ண வேண்டும். நம் சனாதன தர்மத்தில், அதிதி போஜனம் என்ற விருந்தோம்பல் முக்கியமான ஒன்று. அவ்வாறு பிக்ஷை எடுத்து வந்தாலும், நம் யாவரின் உள்ளதையும் கவரும் கள்வர்.

தாருகா வன முனிகள் ஏவிய மத யானையினை அழித்து, அதன் தோலினை பெருமான் உடுத்திக்கொண்டார். இது என்ன மாயம் என்று காண்போர் ஆச்சர்யம் படும் முன், பித்தர் போல அனந்த நடம் ஆடத்தொடங்கினார் இந்த பெருமான். பிரமாபுரம் தன்னில் மேவும் பெருமானும் இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Friday, 1 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - 9

பாடல் - 9
ராகம் - பிலஹரி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டாமரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்த
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
தாழ் சடை தவழும் பெருமானின் நெற்றியினையும் (தலை என்று வைத்துக் கொள்ள வேண்டும்), திருப்பாதங்களையும் காண, மால் (விஷ்ணு) , தண்டாமரையான் (தண் + தாமரையான் = குளிர்ந்த தாமரையில் வாழ்பவர், பிரம்மா) இருவரும் தேடி அலைந்தனர். அவர்கள் முன் நீண்ட நெற்றி உடையவராய், ஜோதிப்பிழம்பாக நிமிர்ந்து நின்றார் பெருமான். அவர் நம் உள்ளம் கவர் கள்வன்.

வாணுதல் - வாள் + நுதல் = வாள் போல், கூறிய மெல்லிய நெற்றி உடைய பெண்கள், மற்றும் வையத்தில் வாழும் பெரியோர்கள் புகழ்ந்து பாடும், நன்முறையில் வையத்தை காக்கும், பிரமாபுரம் மேவும் பெருமான் இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit