Saturday 23 January 2016

திருநல்லம் - கோனேரிராஜபுரம்


திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம், ஒரு சிறிய அழகிய கிராமம். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், வடமட்டம் என்னும் ஊருக்கு முன் கோனேரிராஜபுரம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 24 km தொலைவில் இந்த ஸ்தலம் திருநல்லம் உள்ளது.

திருநல்லம் என்னும் இந்த புனித ஸ்தலம், பவிஷ்யோத்தர புராணம், ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. பூமி தேவி, ஹிரண்யாக்ஷனால் கவரப்பட்டு, கடலுக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம், பின் மஹா விஷ்ணு வராஹ ரூபம் கொண்டு, பூமி தேவியை காப்பாற்றி நிலை நிறுத்திய சம்பவம் பலர் அறிந்ததே. பூமி தேவி, இது போல் தடங்கல்கள் தனக்கு வராமலிருக்க வழி யாது என்று மஹா விஷ்ணுவை கேட்டாள். அதற்கு விஷ்ணு கூறிய வழி, "சிவபெருமானை, பத்ராச்வத்த வனத்தில் சென்று பூஜை செய்து வருவாயாக" என்றார். அந்த பத்ராச்வத்த வனமே நல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம். பூமேஸ்வரம்,ப்ரித்திவீஸ்வரம், பத்ராச்வத்த வனம், திருநல்லம் ஆகியன இந்த ஸ்தலத்தின் வேறு பெயர்கள்.

ஸ்தல சிறப்பு:
1. பூமி தேவி பூஜித்த ஸ்தலம். பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. பூமி தேவி 5 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு துதியினை இறைவன் மீது பாடியுள்ளார்.
2. புரூரவஸ் என்னும் அரசன், கர்க முனியின் சாபத்தினால், குஷ்ட ரோகத்தால் பீடிக்கப் பெற்றான். இந்த ஸ்தலத்தில், வைத்யநாத ஸ்வாமியை ப்ரதிஷ்டை செய்து பூஜித்து, தன் ரோகம் தீர்ந்து மகிழ்ந்தான். வைத்யலிங்கம், நந்தி இல்லாமல் இருக்கும். மேற்கு முகமாக அமையப்பெற்றது. புரூரவஸ் சிவபெருமானை ஒரு அற்புத ஸ்தோத்திரம் கொண்டு துதித்தார்.
3. தர்மத்வஜன் என்னும் மாளவ தேசஅரசன், ஒரு ப்ராம்மனரின் சாபம் பெற்று, பிரம்மராக்ஷஷனாக திரிந்தான். பின்னர் இந்த ஸ்தலத்தில் உள்ள ஞானகூபம் என்னும் கிணற்றின் தீர்த்தத்தை பருக, சாப விமோசனம் கிடைத்து, ராஜஸ்வரூபத்தை திரும்ப பெற்றான்.
4. முரன்டகன் என்னும் சிறுவன், ரதீதர மகரிஷியின் சிஷ்யர் குலவர்தனனின் மகன். கண்வ மகரிஷியை அவன் அறிந்ததில்லை. அதனால், அவர் உணவு கேட்டப்போது மறுத்தான். அவர் சாபமிட்டார். பிசாசாக அலைந்தான். இங்கு வந்து உமா மகேஸ்வரரை தொழுததால், சாபம் நீங்கப்பெற்றான்.
5. தர்ம சர்மா என்ற ஒரு ப்ராம்மனரின் தரித்ரம் நீங்கி, அவர் செல்வ செழிப்போடு வாழ்ந்தார். பல தர்மங்களை செய்தார்.
6. மிகப்பெரிய நடராஜ பெருமானின் மூர்த்தம் இங்கு உள்ளது.
7. ஞான சம்பந்தர், நாவுக்கரசர் (அப்பர்) ஆகியோரால் பாடல் பெற்றது.

இவை ஒரு சிறிய விளக்கமே. இந்த ஸ்தலத்தின் மஹிமையை பற்றி எழுத ஒரு தனி பதிவு வேண்டும். அதனால், இனி சம்பந்தர் இந்த ஸ்தலத்தில் பாடிய பதிகத்தை பார்போம்.

ஸ்வாமி - உமா மகேஸ்வரர்
அம்பாள் - தேக சுந்தரி / அங்கவள நாயகி

உமா மகேஸ்வரரைத் தவிர, புரூரவஸ் ப்ரதிஷ்டை செய்த வைத்யநாத ஸ்வாமி, கண்வர், அகஸ்தியர், சனத் குமாரர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ப்ரதிஷ்டை செய்த 5 லிங்கங்கள் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகிய 7 லிங்கங்கள் (மோக்ஷ லிங்கம்) உள்ளன.

இவற்றைத்தவிர, 8 திக்பாலகர்கள் எழுப்பிய 8 கோவில்கள், தீர்த்தங்கள்  இந்த ஸ்தலத்தை மையமாக வைத்து, சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ளன. தேவலோக சிற்பி விஸ்வகர்மா, சித்தேஸ்வரர் என்ற ஒரு சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

இந்த ஆலயத்தை புராண காலத்தில் எழுப்பியவரும் விஸ்வகர்மா. பின்னர் புரூரவஸ், தன் ரோகம் நீங்கிய மகிழ்ச்சியால், இந்த ஸ்தலத்தின் கருவறை மேல்  உள்ள மிகப்பெரிய விமானம், அதி விமானத்தை, தங்கத்தால் பூசி சிறப்பு செய்தார்.

அடுத்த பதிவிலிருந்து பதிகத்தை அனுபவிப்போம்.

ஓம் நம சிவாய.

2 comments: