Monday, 25 January 2016

திருநல்லம் - 02

ராகம்: ஹம்ஸத்வனி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பொருள்:
தக்கன் - தக்ஷன்
தக்ஷன், தன் மருமகன் சிவனை அழைக்காமல், ஒரு வேள்வியினை நடத்தினார். அதனால் கோபமுற்ற உமையம்மை, தன் தந்தையை பார்த்து நியாயம் கேட்க சென்றாள். தக்ஷன் தன் பெண்ணான தாக்ஷாயணியையும் மதிக்கவில்லை. மனம் உடைந்து, தாக்ஷாயணி அந்த வேள்வித்தீயில் குதித்து மாண்டாள். செய்தியை கேள்வியுற்ற சிவபெருமான், தன் சேவகரான வீரபத்ரரை வேள்வி நடக்கும் இடத்திற்கு அனுப்பி, வேள்வியை அழித்தார். அதோடு அங்கு கூடியிருந்தோரையும் ஓட ஓட விரட்டினார்.

பல தேவர்களும் சிவபெருமானை மதிக்காது நகைத்தனர். பகன் என்ற 12 ஆதிதர்களுள் ஒருவன், தை மாதத்திற்கான ஆதித்யன், இந்நிகழ்வை பார்த்து இடி இடியென சிரித்தான். கோபமுற்ற வீரபத்ரர் அவனது பல்லினை உடைத்தார். அதனால் தான் பொங்கல் திருவிழாவின் போது, சூர்யநாராயண பூஜை செய்யும் போது, சர்க்கரை பொங்கலிற்கு முந்திரி பருப்பு போடாமல் நிவேதனம் செய்யும் வழக்கம் இருக்கிறது.

சிவபெருமான் பின்னர் தீயில் சிதைந்த உமையம்மையை தன் சிரத்தில் தூக்கிக்கொண்டு அண்டம் முழுதும் சுற்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். ஆடியதன் விளைவாக அம்மையின் உடல் பாகங்கள் இந்த பாரத தேசத்தின் பல இடங்களில் சிதறி விழுந்தன. அந்த இடங்களே, 51 சக்தி பீடங்கள் ஆகும். சிவனின் இந்த செயல் அமரர்களுக்கு துக்கத்தினை கொடுத்தது.

சிவபெருமான், தன் பொன்னிறமாக மிளிரும் சடையில் கொக்கின் இறகினையும், குளிர்ந்த பிறைச்சந்திரனையும் சூடியுள்ளார். சிவபெருமானிற்கு வெள்ளை நிறத்தில் ஒரு தனி ப்ரியம். தும்பை மலர்கள் கொண்டு பூஜை செய்தால் விசேஷம். கொக்கின் இறகு, சந்திரன் ஆகியவை வெள்ளை நிறம். அவர் உடல் முழுதும் பூசிக்கொள்ளும் சாம்பல், வெள்ளை நிறம்.

நல்லோனான அவர், நல்லதில் மேவும் அரசனான அவர், நம்மை ஆண்டு காக்கட்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment