Wednesday 27 January 2016

திருநல்லம் - 04

ராகம்: நாதநாமக்ரியா
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குளிர்ந்த சந்திரனை சூடியவர். கொன்றைப் பூக்கள் அலங்கரிக்கும் தாழ் சடை உடையவர்.

பளீர் என்று மிளிரும் முனிவர்கள் அணியக்கூடிய மரவுரி (மர வோடு - புலித்தோல்) அணிந்தவர். வெண்மையான முப்புரி நூலினையும் (பூணூல்) தன் மார்பில் தரித்துள்ளார்.

இடது பாகத்தில், தையல் (அழகிய சிறிய வடிவம் கொண்ட பெண்) - பார்வதியை தாங்கியவர்.

நன்றாக விளையும் வயல்களால் சூழப்பட்ட நல்லத்தின் நாயகன், நம் சிவபெருமான். இதிலிருந்து, திருநல்லத்தில், சம்பந்தரின் காலத்தில் இருந்த செழிப்பினை தெரிந்துக்கொள்ளலாம்.

சிவபெருமானின் சடை, தாழ் சடை என்று மற்றொரு பக்தரான பேயாழ்வார்  (சென்னை திருமயிலையில் அவதரித்தவர். ஸ்ரீ மந் நாராயணனின் நந்தகி என்னும் கத்தியின் அம்சம்) பாடிய பிரபந்த பாடல் பறைசாற்றுகிறது. திருமலையில் உள்ள மூர்த்தத்தில், இரண்டு உருவும் ஒன்றாக தெரிகிறது என்று பாடுகிறார். ஹரி-ஹரன் பேதம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றும் - ஆல்
சூழும் திரண்டு அருவிப் பாயும் திருமலை மேல்
எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

தாழ் சடை - சிவன்
நீள் முடி - விஷ்ணு
ஒண் மழு - ஒளி பொருந்திய அக்னி - சிவன் தாங்கியுள்ளார்
சக்கரமும் - சுதர்ஷன சக்ரம் - விஷ்ணுவின் கையில் உள்ளது
சூழ் அரவு - பாம்பு - சிவனின் கழுத்தில் சூழ்ந்திருக்கும்
பொன் நாண் - பொன்னால் செய்த கயிறு - விஷ்ணு அணிந்திருப்பது

கடலால் சூழப்பட்ட இவ்வுலகில், திரண்டு அருவி பாயும் திருமலையில் வசிக்கும் எந்தையின்  (என் தந்தை - வெங்கடாசலபதி) உருவத்தில், இரு உருவமும் ஒன்றாய் இசைந்துள்ளது. சங்கர நாராயணன் என்று போற்றுகிறோமே, அதைத்தான் ஆழ்வாரும் பாடுகிறார்.

சங்கர நாராயண கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் விஷ்ணு. அர்த்தநாரீச்வர கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் பார்வதி.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாராயணன், நாராயணீ, சிவன் எல்லாம் ஒரே பிரம்மத்தின் மாய தோற்றங்கள். ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாள், இந்த தத்துவத்தை கூறியுள்ளார். ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் தெய்வத்தின் குரல் நூலில் தெளிவு படுத்தியுள்ளார்.


பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment